இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால் இரண்டாம் நாளிலிருந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கே சுருண்டது.
பெங்களூருவில் அசத்திய ரச்சின் ரவீந்திரா :
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து அசத்தியது. இதன்மூலம் இந்திய அணியை விட 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பே அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிக்க அந்த அணியின் இளம் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திரா முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய அவர் 157 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 134 ரன்கள் குவித்து இறுதி வீரராக ஆட்டம் இழந்தார்.
அதிலும் இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அதோடு தனிப்பட்ட வகையில் இந்த சதம் அவருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் ரச்சின் ரவிந்திராவின் பெற்றோர்கள் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர்கள் நியூசிலாந்தில் குடியேறிய வேளையில் அங்கு பிறந்து வளர்ந்த ரச்சின் ரவீந்தரா நியூசிலாந்து அணிக்காக தற்போது விளையாடி வரும் வேளையில் தன்னுடைய தாத்தா பாட்டியின் சொந்த ஊரான பெங்களூருவில் சதம் அடித்தது உண்மையிலேயே அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
இதையும் படிங்க : இந்தியாவுக்காக சச்சின், கங்குலியே செய்யாததை கோலி செஞ்சுருக்காரு.. ஃபிளாப்பாகவும் அவரே காரணம்.. சஞ்சய் மஞ்ரேக்கர்
ஏற்கனவே அவர் அளித்திருந்த பேட்டியில் பெங்களூருவில் எங்களது உறவினர்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் பெங்களூர் மைதானத்தில் தான் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் நிச்சயம் அவர்களது குடும்பத்திற்கும், அவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



