நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட பெரிய டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக உலகின் டாப் இரண்டு அணிகள் மோதும் இந்த தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்க்டன் நகரில் துவங்கியது. இந்திய நேரப்படி 11.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 5.1 ஓவரில் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலாக விளையாடிய ஃபின் ஆலன் 2 பவுண்டரி மூன்று சிக்சருடன் 32 (17) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே நிதானமாக விளையாடிய நிலையில் அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்தரா அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
நொறுக்கிய சிஎஸ்கே ஜோடி:
அந்த வகையில் மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடி ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வலுப்படுத்தியது. நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்து அதிரடியான பேட்டிங் செய்தனர். அதில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்தரா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 68 (35) ரன்களை 194.29 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார்.
அவருடன் மறுபுறம் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்ட டேவோன் கான்வே தன்னுடைய பங்கிற்கு அரை சதமடித்து 63 (46) ரன்கள் குவித்து ஆட்டமிருந்தார். இறுதியில் கிளன் பிலிப்ஸ் 19* (10) மார்க் சேப்மேன் 18* (13) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து 215/3 ரன்கள் குவித்து மிரட்டியது.
குறிப்பாக கடந்த வருடம் அதிக ரன்கள் குவித்து சென்னை ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய டேவோன் கான்வே சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். இருப்பினும் இந்த போட்டியில் விளையாடி ஃபார்முக்கு திரும்பிய அவருடன் சிஎஸ்கே அணிக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 194 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: 2013இல் வன்மத்தால் கம்பீர் பழி வாங்காம விட்ருந்தா.. என்னோட பேங்க் பேலன்ஸ் குறைஞ்சுருக்காது.. மஞ்சோ திவாரி
அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த நியூஸிலாந்து ஜோடி ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கியது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மறுபுறம் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ், மிட்சேல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 216 ரன்களை ஆஸ்திரேலியா சேசிங் செய்து வருகிறது.