கண்ணீர் மல்க விடைபெற்றார் நியூசிலாந்து ஜாம்பவான்! சச்சின்,விராட் வாழ்த்து – சாதனை பட்டியல் இதோ

Ross Taylor Farewell 3.jpeg
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

அந்த நிலையில் இந்த தொடரின் சம்பிரதாய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் மற்றொரு வீரர் டாம் லாதம் நியூசிலாந்து கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

கண்ணீர் மல்க ஓய்வு பெற்ற ராஸ் டெய்லர்:
அத்துடன் நியூசிலாந்துக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி தனது திறமையால் பல வெற்றிகளைத் தேடி கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இந்தப் போட்டியில் கடைசி முறையாக நியூசிலாந்துக்காக விளையாடினார். இந்த ஓய்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்ட அவர் கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அந்த நிலையில் இந்த நெதர்லாந்து தொடருடன் டி20, ஒருநாள் கிரிக்கெட்டிலும் விடைபெற்ற அவரை உற்சாகமாக வழியனுப்ப நியூசிலாந்து நாட்டு ரசிகர்கள் இன்றைய போட்டியின்போது மைதானத்தில் கூடி இருந்தார்கள்.

மேலும் அவரின் தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளும் இந்த போட்டியில் அவர் கடைசியாக தனது நாட்டுக்காக விளையாடுவதைப் பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து துவங்கிய இந்த போட்டியின் ஆரம்பத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அப்போது நியூசிலாந்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாட்டுக்காக கடைசி முறையாக விளையாடிய ராஸ் டெய்லர் உணர்ச்சியில் கண்கலங்கி தேசிய கீதம் பாடியது காண்போரின் நெஞ்சங்களை தொட்டது.

- Advertisement -

நியூஸிலாந்து அபார வெற்றி:
அந்த உணர்ச்சி மிகுந்த தருணத்தை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்துக்கு தொடக்க வீரர் ஹென்ரி நிகோல்ல்ஸ் 2 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். இதனால் 12/1 தடுமாறிய நியூசிலாந்தை அடுத்து களமிறங்கிய வில் எங் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் மார்டின் கப்தில் அதிரடியாக ரன்களை குவித்து மீட்டெடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த இந்த ஜோடியில் 123 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 2 சிக்சர் உட்பட சதம் அடித்த மார்ட்டின் கப்டில் 106 ரன்களில் அவுட்டானார்.

அதை தொடர்ந்து தனது கடைசி போட்டியில் கடைசி முறையாக களமிறங்கிய ராஸ் டைலருக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்க நெதர்லாந்து வீரர்கள் அவரின் இரு புறத்திலும் வரிசையாக நின்று கைதட்டி கௌரவமான வரவேற்பை அளித்தது ரசிகர்களின் பாராட்டை பெற்றது. அதைத் தொடர்ந்து விளையாடிய ராஸ் டைலர் 16 பந்துகளில் ஒரு சிக்சர் உட்பட 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து மீண்டும் ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்துக்கு மற்றொரு வீரர் வில் எங் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட சதமடித்து 120 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த நியூசிலாந்து 333 என்ற மிகப்பெரிய ரன்களை எடுத்தது. அதை தொடர்ந்து 334 என்ற மெகா இலக்கை துரத்திய நெதர்லாந்து நியூசிலாந்தின் உலகத்தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ஸ்டீபன் மைபர்க் 64 (43) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் அசத்திய மாட் ஹென்ரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை ருசித்து கோப்பையை முத்தமிட்டது. இந்த வெற்றிக்கு சதமடித்து 120 ரன்கள் குவித்த வில் எங் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

டெய்லருக்கு சச்சின் வாழ்த்து:
இப்போட்டியில் கடைசி முறையாக விளையாடிய ராஸ் டைலர் தனது சொந்த மண்ணில் சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன்னிலையில் குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்து தாய்நாட்டுக்காக கடைசி போட்டியிலும் வெற்றியோடு பிரியாத மனதுடன் விடைபெற்றார். கடந்த 1984-ஆம் ஆண்டு பிறந்து கடந்த 2006-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்த ராஸ் டெய்லர் அதன்பின் தனது திறமையால் அந்த அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்தார். அப்படிப்பட்ட அவருக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் மாலையிட்டு கௌரவப்படுத்தப் பட்டது. அவருக்கு சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களும் விராட் கோலி போன்ற இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிகழ்த்திய ஒரு சில முக்கிய சாதனைகளின் பட்டியலைப் பார்ப்போம்.

- Advertisement -

1. நியூசிலாந்துக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள அவர் 450 போட்டிகளில் 18199 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

2. அதேபோல் 40 சதங்களை அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

3. மேலும் 236 போட்டிகளில் 8607 ரன்களையும் 21 சதங்களையும் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : கேப்டனானதும் பேட்டில் ரன் வரவில்லை, கேப்டன்ஷிப் பிரஷர் காரணமா? நேரடியாக பதிலளித்த ஜடேஜா

4. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் 7683 ரன்களை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்ற மகத்தான பெருமையையும் பெற்றுள்ளார்.

Advertisement