ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. மார்ச் இரண்டாம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய 250 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ஹர்திக் பாண்டியா 45 அக்சர் பட்டேல் 42 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மார்ட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் சிறப்பாக விளையாட முடியாமல் 45.3 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் போராடி 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழகத்தில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஸ்ரேயாஸ், பாண்டியா அசத்தல்:
அதனால் குரூப் ஏ பிரிவில் மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பெற்ற இந்தியா செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை சந்திக்க தகுதி பெற்றது. மறுபுறம் 2 வெற்றிகளைப் பெற்ற நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் துபாயின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்ததாக நியூசிலாந்து கேப்டன் மிட்சேல் சான்ட்னர் கூறியுள்ளார்.
இருப்பினும் மிடில் ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயரும் கடைசிக்கட்ட ஓவர்களில் பாண்டியாவும் சிறப்பாக விளையாடி வெற்றியை பறித்து விட்டதாக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தங்களது செமி ஃபைனல் போட்டி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் விளையாடிய பிட்ச் ஸ்லோவாக இருந்தது. அது எங்களுக்கு தெரியும்”
செமி ஃபைனல் சவால்:
“இந்தியா மிடில் ஓவர்களை சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். ஸ்ரேயாஸ் சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். ஹர்திக் பாண்டியா நன்றாக ஃபினிஷிங் செய்தார். நாங்கள் நினைத்ததை விட பிட்ச் சுழலுக்கு அதிக சாதகமாக இருந்தது. அதை 4 தரமான ஸ்பின்னர்கள் வைத்து இந்திய அணி சரியாக பயன்படுத்தினார்கள். பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பது எங்களுக்கு வெற்றிக்கான சாவியாகும்”
இதையும் படிங்க: வலுவான நியூஸிலாந்தை வருணை வைத்து சாய்க்க இதான் காரணம்.. ஆஸிக்காக காத்திருக்கோம்.. ரோஹித் பேட்டி
“எங்களுடைய அடுத்தப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. அங்கே ஹென்றி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அங்குள்ள பிட்ச்சில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளில் தென்னாப்பிரிக்காவிடம் 4 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச்சா அல்லது புதிதா என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.



