நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது.
குறிப்பாக வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பந்து வீசாமல் ரோகித் சர்மா எடுத்த முடிவு பெரிய பின்னடைவை கொடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.
இந்தியா போராடி தோல்வி:
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா முடிந்தளவுக்கு போராடியும் 462 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜெய்ஸ்வால் 35, விராட் கோலி 70, ரோஹித் சர்மா 52, ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து இந்தியாவை காப்பாற்ற போராடினார்கள்.
ஆனால் கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓரோர்கே 3, மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் டாம் லாதம் 0, டேவோன் கான்வேயை 17 ரன்களில் அவுட்டாக்கி ஜஸ்ப்ரித் பும்ரா போராடினார்.
நியூஸிலாந்து சாதனை வெற்றி:
ஆனால் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி வில் எங் 38*, ரச்சின் ரவீந்திரா 38* ரன்கள் எடுத்து நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதனால் இந்தியாவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. கடைசியாக கடந்த 1988ஆம் ஆண்டு மும்பையில் ஜான் ரைட் தலைமையிலான நியூசிலாந்து முகமது அசாருதீன் தலைமையிலான இந்தியாவை 136 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா இந்த விடயத்தில் தவறு செய்து விட்டார்.. இந்திய அணி ஜெயிப்பது கஷ்டம் – அஜய் ஜடேஜா ஓபன்டாக்
அதன் பின் தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகளை இப்போட்டியில் உடைத்துள்ள நியூஸிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 46க்கு அவுட்டானதால் ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா கடைசி வரை அதிலிருந்து மீள முடியாமல் போராடி தோற்றது. அதனால் 2025 ஃபைனலுக்கு தகுதி பெறவும் இத்தொடரை வெல்லவும் அடுத்த போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



