விராட் கோலி – டிராவிட்டின் 12 வருட சாதனையை தகர்த்த கான்வே – மிட்சேல் ஜோடி, இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து எளிதான வெற்றி

Conway Mitchell
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொள்கிறது. அதிலும் குறிப்பாக 2019 உலகக்கோப்பை ஃபைனலில் தோற்காத போதிலும் ஐசிசியின் முட்டாள்தனமான விதிமுறையால் சாம்பியன் பட்டத்தை நழுவ விட்ட பின் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 8ஆம் தேதி கார்டிப் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 291/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஜோ ரூட் 6 ரன்களில் அவுட்டானாலும் ஹரி ப்ரூக் 25, டேவிட் மாலன் 54, பென் ஸ்டோக்ஸ் 52, ஜோஸ் பட்லர் 72, லியாம் லிவிங்ஸ்டன் 52 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கணிசமான ரன்களை எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர 3 விக்கெட்டுகளும் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அதை தொடர்ந்து 292 ரன்கள் துரத்திய நியூசிலாந்துக்கு நட்சத்திர வீரர் டேவோன் கான்வேயுடன் சேர்ந்து 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் எங் 29 (32) ரன்களில் அடில் ரசித் சுழலில் க்ளீன் போல்டானார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தி அரை சதமடித்த கான்வேயுடன் அடுத்ததாக வந்த ஹென்றி நிக்கோலஸ் 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 26 ரன்கள் எடுத்திருந்த போது டேவிட் வில்லி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து வந்த டார்ல் மிட்சேல் சற்று அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். அவருடன் எதிர்புறம் சிறப்பாக செயல்பட்ட டேவோன் கான்வே நேரம் செல்ல செல்ல அவுட்டே ஆகாமல் நங்கூரமாகவும் நிதானமாகவும் ரன்கள் குவித்து சதமடித்து 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 111* (121) ரன்கள் விளாசி அசத்தினார். ஆனால் அவரை விட மிடில் ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்த டார்ல் மிட்சேல் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 118* (91) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 45.4 ஓவரிலேயே 297/2 ரன்களை எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எளிதாக தோற்கடித்து 1 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 111* ரன்கள் குவித்து நங்கூரமாக செயல்பட்ட டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க: IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் மட்டும் என்ன ஒசத்தியா. எல்லா டீமையும் சமமா பாருங்க – முரளிதரன் கருத்து

அத்துடன் 3வது விக்கெட்டுக்கு 180* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்த கான்வே – மிட்சேல் ஜோடி இப்போட்டி நடைபெற்ற கார்டிஃப் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ராகுல் டிராவிட் – விராட் கோலியின் 12 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தனர். அந்த பட்டியல்:
1. டேவோன் கான்வே – டார்ல் மிட்சேல் : 180*, 2023
2. ராகுல் டிராவிட் – விராட் கோலி : 170, 2011
3. சர்ப்ராஸ் கான் – சோயப் மாலிக் : 163, 2016
4. எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா : 144, 2014

Advertisement