விரைவில் பாரிஸ் நகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளது. விளையாட்டு உலகின் மிகப்பெரிய கௌரவமிக்க தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் இந்த வருடம் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வீரர்களும் வீராங்கனைகளும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் அபாரமாக விளையாடிய நீரஜ் சோப்ரா முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
எனவே இம்முறையும் அவர் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வெல்வதற்கு தயாராகி வருகிறார். முன்னதாக இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை காட்டிலும் கிரிக்கெட் அதிக மக்களால் பார்க்கப்பட்டு விளையாடப்படும் விளையாட்டாக இருக்கிறது என்றே சொல்லலாம். அதனாலேயே சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களை மக்கள் ஹீரோக்களாகவும் கொண்டாடுகின்றனர்.
நோ கம்பேரிசன்:
இருப்பினும் இந்தியாவில் கிரிக்கெட்டர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையும் வரவேற்பும் மற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் அந்த நிலையை தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கொஞ்சம் மாற்றியுள்ளார் என்றும் சொல்லலாம். இந்நிலையில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நட்சத்திரமாக உருவெடுத்தாலும் தம்மை எப்போதும் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிட்டுக் கொண்டதில்லை என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் இங்கே வேற லெவெலில் இருக்கிறது என்பது நான் வளர்ந்து வரும் போதே எனக்கு தெரியும். இந்தியாவுக்காக மற்ற விளையாட்டுகளில் விளையாடும் வீரர்களை விட கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். ஆனால் அதற்காக நானும் கிரிக்கெட்டை தான் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்ற அர்த்தமில்லை”
“எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் நான் எப்போதும் ஈட்டி எறிதலை தொடர விரும்புகிறேன். அந்த விளையாட்டில் விளையாடி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று நான் நினைத்ததில்லை. அந்த விளையாட்டை நேசித்ததாலேயே நான் தேர்ந்தெடுத்தேன். விராட் கோலி அல்லது எம்.எஸ். தோனியுடன் எப்போதும் என்னை நான் ஒப்பிட முயற்சித்ததில்லை. ஏனெனில் இந்தியாவில் நிதர்சனம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்”
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்த பின்னர் நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி இதுதான் – அக்சர் படேல் விளக்கம்
“ஆம் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பின் இந்தியாவில் உள்ள மக்கள் என்னையும் அடையாளம் கண்டுக்கொள்கின்றனர். இருப்பினும் கிரிக்கெட்டர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை எனக்குத் தெரியும். குறிப்பாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். அதே மக்கள் ஈட்டி எறிதலை பயிற்சி செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமல்ல” எனக் கூறினார்.



