வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நேபாள் 20 ஓவரில் போராடி 148/8 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கௌசல் மல்லா 30, கேப்டன் ரோஹித் பௌடேல் 30, குல்சன் ஜா 22 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4, நவீன் பிடைசீ 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 5, அமீர் ஜங்கோ 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
180 தோல்விக்குப் பின்:
மிடில் ஆர்டரில் ஆகிம் ஆகஸ்டி 15, ஜூவெல் ஆண்ட்ரூ 5, கேசி கார்ட்டி 16, நவீன் பிடைசீ 22 ரன்களில் அவுட்டாகி பின்னடைவையே உண்டாக்கினர். இறுதியில் லோயர் ஆர்டரில் பேபியன் ஆலன் 19, ஆக்கில் ஹொசைன் 18 ரன்கள் அடித்துப் போராடினர். அதையும் தாண்டி 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸை 129/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நேபாள் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டு அணிக்கு எதிராக நேபாள் தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளது. கடந்த பல வருடங்களாக விளையாடி வரும் நேபாள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நேபாள் இதற்கு முன் 180 போட்டிகளில் விளையாடியுள்ளது.
சரித்திர வெற்றி:
ஆனால் அந்த 180 போட்டிகளிலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு எதிராக நேபாள் ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. இருப்பினும் விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்போட்டியில் 2012, 2016 டி20 உலகச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்துள்ள நேபாள் சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால் நேபாள் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியானது மழையால் நின்றால் என்ன ஆகும்? ரூல்ஸ் கூறுவது என்ன? – விவரம் இதோ
இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் நேபாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு திபேந்திர சிங், கரண் கேசி, நந்தன் யாதவ், லலித் ராஜ்பன்சி, கேப்டன் ரோகித் பௌடேல் தலா 1, கௌசல் புர்டேல் 2 விக்கெட் எடுத்தனர். மறுபுறம் ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டின் அசுரனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது நேபாள் போன்ற கத்துக்குட்டியிடம் முதல் முறையாக அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.



