வீடியோ : சிக்ஸர் அடித்ததால் புதருக்குள் சென்று தேடிய வீரர்கள் – சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி ஒரு நிலையா?

ENG vs NED Ball Search
- Advertisement -

நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஜூன் 17இல் துவங்கிய அந்த தொடரில் 2019 உலக கோப்பையை வென்று சாம்பியனாக திகழும் இங்கிலாந்து எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டதை விட அசுரத்தனமாக செயல்பட்ட இங்கிலாந்து நெதர்லாந்தை வதம் செய்தது என்றே கூறலாம். ஆம் அந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து 498/4 ரன்களை மலைபோல் குவித்தது.

அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தனது சொந்த சாதனையை முறியடித்த இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 ரன்னில் அவுட்டானாலும் அடுத்து வந்த டேவிட் மாலன் மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் ஆகியோர் இணைந்த கைகளைப் போல் நெதர்லாந்து பவுலர்களை ஒவ்வொரு ஓவரிலும் சொல்லி சொல்லி பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டனர். 2-வது ஓவரில் ஜோடி சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் பிலிப் சால்ட் தனது முதல் சதமடித்து 122 (93) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இங்கிலாந்து மாஸ்:
அடுத்ததாக ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் தமக்கு அல்வாவை போல சிக்கிய நெதர்லாந்து பவுலர்களை வெறிகொண்ட வேங்கையாக எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் சரவெடியாக பவுண்டரிகளை வெளுத்து வாங்கினார். அடுத்த 13 ஓவர்களுக்குள் 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவருடன் விளையாடி வந்த டேவிட் மாலன் 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 125 (109) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த கேப்டன் மோர்கன் கோல்டன் டக் அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய பட்லர் 7 பவுண்டரி 14 சிக்சருடன் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 162* (70) ரன்களை தெறிக்கவிட்டார்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்டு 66* (22) ரன்களை நொறுக்கி மாஸ் பினிஷிங் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 499 என்ற இமாலய இலக்கை துரத்திய நெதர்லாந்து 49.4 ஓவரில் முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் 266 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக எட்வர்ட்ஸ் 72* ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 232 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2-வது பெரிய வெற்றியை பதிவு செய்து 1 – 0* (3) என தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

புதருக்குள் பந்து:
முன்னதாக இப்போட்டியில் நெதர்லாந்தை துவம்சம் செய்த இங்கிலாந்து மொத்தமாக 26 சிக்சர்களை பறக்க விட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சரை அடித்த அணி என்ற தனது சொந்த உலக சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது. அந்த 26 சிக்ஸர்களில் பீட்டர் சீலர் வீசிய 9-வது ஓவரில் முரட்டுத்தனமான பவர் கொடுத்து மெகா சிக்சரை இங்கிலாந்தின் டேவிட் மாலன் பறக்கவிட்டார். அது போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு வெளியே பறந்த அருகில் உள்ள புதர் காட்டுக்குள் விழுந்தது. அதை கண்டுபிடிப்பதற்காக உடனடியாக லோகன் வன் பீக், டாம் கூப்பர் போன்ற நெதர்லாந்து வீரர்கள் புதருக்குள் நுழைந்து தீவிரமாக தேடினார்கள்.

அவர்களுக்கு உறுதுணையாக மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் கேமராமேன் ஆகியோரும் புதருக்குள் சென்று பந்தை தேடிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. பொதுவாக உள்ளூர் நமது சொந்த ஊரில் நண்பர்களுடன் உள்ளூரில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஒரு பந்து மட்டுமே வைத்திருப்போம் என்பதால் இதுபோல் புதருக்குள் பந்து சென்று விட்டால் அதை தேடி எடுத்த பின்பு தான் போட்டி நடைபெறும்.

இதையும் படிங்க : IND vs RSA : பெங்களூரு 5வது போட்டியை அச்சுறுத்தும் மழை பெய்யுமா?, முழு வெதர் ரிப்போர்ட் இதோ

அதேபோன்ற தருணம் இந்த இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதிய சர்வதேச போட்டியில் நடந்தேறியது ரசிகர்களை கலகலக்க வைத்தது. நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டி இந்தியாவை போல் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இல்லாததால் குறைந்த அளவு பந்துகளை மட்டுமே கைவசம் வைத்திருப்பதே இந்த அக்கறையான தேடலுக்கு முக்கிய காரணமாகும்.

Advertisement