
ஐசிசி 2027 உலகக் கோப்பை தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 12ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டி நகரில் 79வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க வீரர்கள் ஜார்ஜ் முன்சே நங்கூரம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் சார்லி டியர் 23, பிரண்டன் மெக்முலன் 21, லியம் நைலர் 14, பின்லே மெக்கிரேத் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ஜார்ஜ் முன்சே சதத்தை அடித்து சிறப்பாக பேட்டிங் செய்தார்.
மிடில் ஆடரில் அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் மேத்யூ கிராஸ் அரை சதத்தை அடித்து 59 (49) ரன்கள் குவித்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய முன்சே 14 பௌண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 191 (150) ரன்களில் அவுட்டானார். அந்த வகையில் இரட்டை சதத்தை நழுவ விட்ட அவர் ஒருநாள் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அசோசியேட் (உறுப்பு நாட்டு) பிளேயர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு கனடாவுக்கு எதிராக அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் பால் ஸ்டெர்லிங் 177 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனை. இறுதியில் மைக்கேல் லீஸ்க் 28* (14) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் ஸ்காட்லாந்து 369/6 ரன்களை குவித்து அசத்தியது. நெதர்லாந்து அணிக்கு அதிகபட்சமாக மைக்கேல் லேவிட் 3, ஆரியான் தத் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்த விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓ’தாவூத் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுத்த மைக்கேல் லேவிட் 44, கேப்டன் ஸ்காட் எட்வரஸ் 36 ரன்கள் குவித்தனர். மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய தாவுத் சதத்தை அடித்து தம்முடைய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.
இதையும் படிங்க: இந்த சேன்ஸை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்வேன்.. நான் ரெடியா இருக்கேன் – கருண் நாயர் பேட்டி
அவருடன் லோயர் மிடில் ஆர்டரில் தேஜா நிடமனரு 51, நோ கிராஸ் 50 ரன்கள் அடித்து கை கொடுத்தார்கள். இறுதியில் மேக்ஸ் ஓ’தாவூத் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 158* (130) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 49.2 ஓவேரில் 374/6 ரன்களை எடுத்த நெதர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த உறுப்பு நாட்டு அணியாக சாதனை படைத்தது.