விராட் கோலியுடன் சண்டை, ராகுல் சமாதானத்தை தாண்டி கை கொடுக்க மறுத்த ஆப்கானிஸ்தான் வீரர் – காரணம் இதோ

Naveen Ul Haq Fight
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கடுமையாக போராடி 20 ஓவர்களில் 126/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 44 (40) ரன்களும் விராட் கோலி 31 (30) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 127 ரன்கள் துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் கடைசி ஓவரில் களமிறங்கிய நிலையில் நிலையில் கெய்ல் மேயர்ஸ் 0, ஆயுஷ் படோனி 4, க்ருனால் பாண்டியா 14, தீபக் ஹூடா 1, மார்கஸ் ஸ்டோனிஸ் 13, நிக்கோலஸ் பூரன் 13 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே பெங்களூருவின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் 19.5 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்ட லக்னோ சார்பில் அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கெளதம் 23 (13) ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனார்.

- Advertisement -

வெடித்த சண்டை:
அப்படி குறைந்த ஸ்கோராக இருந்தாலும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் 77/8 என்ற நிலைமையில் வெற்றி பறிபோன பின் அமித் மிஸ்ரா மற்றும் ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் ஆகியோர் 9வது விக்கெட்டுக்கு 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முழு மூச்சுடன் போராடினர். குறிப்பாக 17வது ஓவரின் 4வது பந்தில் நவீன்-உல்-ஹக் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டார். அந்த நிலையில் வெள்ளைக்கோட்டுக்கு உள்ளே வந்த அவரை சிராஜ் பந்தை ஸ்டம்ப்பில் அடித்து கோபமாக ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் கோபமடைந்த நவீன் அருகில் இருந்த விராட் கோலி ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு அஞ்சாத நவீன்-உல்-ஹக் பதிலுக்கு விராட் கோலியுடன் வார்த்தைகளை பேசி நேருக்கு நேராக மோதினார். அப்போது உடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் உள்ளே புகுந்து சண்டையை தடுத்தனர். இருப்பினும் அமைதியாகாத விராட் கோலி என்ன நடந்தது என்பதை பற்றி அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோரிடம் ஆக்ரோஷமாக விளக்கி பேசினார். இறுதியில் நடுவர் இருவரையும் சமாதானம் செய்ததால் போட்டி மேற்கொண்டு எந்த சர்ச்சையும் இல்லாமல் நடைபெற்ற முடிந்தது.

- Advertisement -

ஆனால் போட்டி முடிந்த பின் கை கொடுத்த போது மீண்டும் விராட் கோலி எதோ வம்பிழுத்த நிலையில் மேக்ஸ்வெல் அதை தடுத்தார். அதை தொடர்ந்து லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் களத்தில் நடந்ததைப் பற்றி விராட் கோலியிடம் கேட்டறிந்தார். அப்போது தனது கருத்துக்களை விராட் கோலி ராகுலிடம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த பக்கம் நவீன்-உல்-ஹக் வந்தார். அந்த சமயத்தில் என்ன தான் களத்தில் சண்டை போட்டாலும் பகையை மறந்து விராட் கோலி லக்னோ கேப்டன் ராகுலின் சமாதானத்திற்கு பின் அமைதியாகி அவருக்கு தாமாக சென்று கை கொடுக்க விரும்பினார். அதே போல் கேஎல் ராகுலும் நடந்ததை மறந்து விட்டு விராட் கோலியிடம் பேசுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் தன்னை விட சர்வதேச நிறைய சாதித்து நட்சத்திரங்களாக திகழும் அந்த இரு சீனியர் வீரர்கள் அழைத்தும் அதை ஏற்காத நவீன்-உல்-ஹக் பேசுவதற்கு எதுவுமில்லை என்று தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டார். அதிலும் குறிப்பாக விராட் கோலி சண்டையை மறந்து கையை நீட்டி நட்பு பாராட்ட தயாராக இருந்த போதிலும் அதை அவர் தட்டி கழித்து மறுத்து விட்டார்.

இதையும் படிங்க:LSG vs RCB : கையில் இருந்த மேட்சை நாங்க கோட்டை விட இதுவே காரணம் – க்ருனால் பாண்டியா வருத்தம்

பொதுவாக களத்தில் சண்டைகள் நடைபெற்றாலும் போட்டியின் முடிவில் ஜென்டில்மேனாக இரு அணி வீரர்களும் கை எடுத்துக் கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் வெற்றிக்காக களத்தில் சண்டை போட்டாலும் முடிவில் கை கொடுத்த விராட் கோலிக்கு இளம் ஆப்கானிஸ்தான் வீரர் மறுப்பு தெரிவித்தது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement