ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரில். அத்தொடரின் முதல் போட்டியில் சௌராஷ்டிராவுக்கு எதிராக தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு தங்களுடைய இரண்டாவது போட்டியில் 18ஆம் தேதி டெல்லியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 674-6 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக சாய் சுதர்சன் இரட்டை சதமடித்து 213, வாஷிங்டன் சுந்தர் சதமடித்து 152, ரஞ்சன் பிரதோஷ்பால் சதமடித்து 117 ரன்கள் எடுத்தனர். டெல்லிக்கு அதிகபட்சமாக நவ்தீப் சைனி, ஹிமான்சு சௌஹான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லியை 266 ரன்களுக்கு தமிழ்நாடு சுருட்டியது. அதிகபட்சமாக யாஷ் துள் 105* ரன்கள் எடுத்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
வெற்றியை பறிக்க:
பின்னர் 408 ரன்கள் முன்னிலைப் பெற்ற தமிழ்நாடு ஃபாலோ ஆன் கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் டெல்லி பேட்டிங் செய்தது. அந்த வாய்ப்பில் சனாத் சங்வான் 83 ரன்கள் எடுத்த போதிலும் எதிர்ப்புறம் வந்த வீரர்களை தமிழ்நாடு சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் 180-8 என சரிந்த டெல்லி அணியை நான்காவது நாள் மாலைக்குள் சுருட்ட தமிழ்நாடு பவுலர்கள் முழுமூச்சுடன் பந்து வீசினர்.
அப்போது மேற்கொண்டு 2 விக்கெட்டுகளை விடக்கூடாது என்பதற்காக டெல்லி வீரர் நவ்தீப் சைனி நங்கூரமாக விளையாடினார். அப்போது அவரை அவுட்டாக்க ஒரு தமிழ்நாடு பவுலர் பவுன்சர் பந்தை வீசினார். அதைத் தடுக்க குனிந்து போது நவ்தீப் ஷைனி மேல் பந்து பட்டு சென்றது. ஆனாலும் அதனால் காயத்தை சந்திக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் அவர் மேலே நிமிர்ந்து தன்னுடைய கட்டை விரலை உயர்த்தி காட்டினார்.
ஆஸ்கர் ஆக்ட்டிங்:
இருப்பினும் அதன் பின் எப்படியாவது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சற்று தூரம் நடந்து சென்ற சைனி அப்படியே தலையில் அடிபட்டது போல் மயங்கி விழுந்தார். அதனால் நடுவர்கள் அனுமதியுடன் டெல்லி அணியின் மருத்துவர்கள் வந்து அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் போட்டி தாமதமாகி மீண்டும் நடைபெற்றது. இறுதியில் அவரது எண்ணப்படியே 15* (64) ரன்கள் எடுத்த சைனி அவுட்டாகாமல் சவாலை கொடுத்தார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு அவரையும் கூட்டிட்டு போங்க.. சூப்பரா விளையாடுவாரு – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
அதனால் 4வது நாள் முடிவில் 193-8 ரன்கள் எடுத்த டெல்லி போட்டியை டிரா செய்தது. அதன் காரணமாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் இன்னிங்ஸ் வெற்றியை இழந்த தமிழ்நாடு 7க்கு பதிலாக 3 புள்ளிகளை மட்டுமே பெற்றது. அந்த வகையில் ஆஸ்கர் அளவில் ஆக்டிங் செய்து தமிழ்நாடு அணியின் வெற்றியை பறிக்கும் வேலையில் ஈடுபட்ட சைனி மீது தமிழக ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.



