இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று கான்பர்ரா மைதானத்தில் துவங்கியது. இந்த முதலாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், பின்னர் இறுதியில் அதிரடி காட்டிய ஜடேஜா 44 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த டி20 போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சாகர் அணியில் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இணைந்துள்ளார். மேலும் தொடக்க வீரரான அகர்வாலுக்கு பதிலாக மணிஷ் பாண்டே அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி அணியின் முக்கிய இரண்டு மாற்றங்களாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு அளித்துள்ளார் கோலி இதன் மூலம் t20 அணியில் தற்போது 2 தமிழக வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அறிமுகமான நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அசத்தினார். இன்று டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியில் அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.