கங்குலி தான் அதை செய்யல, நீங்களாச்சும் அந்த முடிவை எடுக்கனும் – புதிய பிசிசிஐ தலைவருக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

Ganguly-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 8வது முறையாக நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 2007க்குப்பின் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் காணப்பட்டாலும் அதற்கான நம்பிக்கை குறைவாகவே தென்படுகிறது. ஏனெனில் இது தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு முதல் அடியிலேயே சறுக்கலை கொடுத்துள்ளது. காரணம் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள பவுலர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் சமீபத்திய போட்டிகளில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் உள்ளனர். அதனால் இம்முறை இந்தியா கோப்பையை வெல்வது கடினம் என்று ரசிகர்கள் ஆரம்பத்திலேயே கவலையடைந்துள்ளனர்.

Rahul Dravid Rohit Sharma Jasprit Bumrah

- Advertisement -

முன்னதாக இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாக இந்தியா பங்கேற்ற அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற முக்கியமற்ற தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளது ரசிகர்களை கடுகடுப்பாக வைத்துள்ளது. ஏனெனில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்ற 60 போட்டிகளில் 59 போட்டிகளில் விளையாடிய அவர் அதே காலகட்டத்தில் இந்தியா விளையாடிய 70 டி20 போட்டிகளில் 16இல் மட்டுமே விளையாடியுள்ளார். இதனால் இவர் ஐபிஎல் தொடரில் தவறாமல் களமிறங்குவார் இந்தியாவுக்காக காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாடுகின்றனர்.

சாஸ்திரி கோரிக்கை:
அத்துடன் பணிச்சுமையை நிர்வகிக்க இந்தியா பங்கேற்கும் முக்கியமற்ற போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மாவைப் போன்ற நட்சத்திரங்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் எந்த காரணத்துக்காகவும் எந்த ஒரு போட்டியையும் தவற விடுவதில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் முக்கிய வீரர்கள் இப்படி பணத்துக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டுக்கு ஓய்வு பெறுவதை பார்த்துக் கொண்டு பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Roger Binny

இந்நிலையில் இந்திய வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதே முக்கியம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அதற்காக தேவைப்பட்டால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க ஐபிஎல் அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ கட்டளையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக 2019 முதல் தலைவராக இருந்த சவுரவ் கங்குலி விரைவில் பதவி விலகும் நிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்கும் தன்னுடைய நண்பர் மற்றும் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இந்த பிரச்சனையில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது விளையாடப்படும் அதிகப்படியான கிரிக்கெட்டுக்கு மத்தியில் ஒரு வீரர் விளையாடுவதில் சமநிலை இருக்க வேண்டும். மேலும் இந்திய வீரர்கள் எப்போது ஓய்வு எடுக்க வேண்டும்? என்பதில் பிசிசிஐ தலைவர் முக்கிய பங்காற்ற வேண்டும். வரும் காலங்களில் இந்தியாவுக்காக விளையாடும் ஒரு முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட போட்டிகளில் ஓய்வெடுக்க வேண்டுமானால் அதற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும்”

MI - Ravi Shastri

“அதற்கு புதிதாகப் பொறுப்பேற்கும் பிசிசிஐ தலைவர் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட இந்தியாவுக்காக விளையாடுவதே முக்கியம் என்பதை ஐபிஎல் அணி நிர்வாகங்களுடன் அமர்ந்து பேசி அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும் எந்தெந்த வீரர்கள் எந்த மாதிரியான நேரத்தில் எவ்வளவு போட்டிகளில் ஓய்வெடுத்தால் நாட்டுக்காக சிறப்பாக விளையாட முடியும் என்பதை முன்கூட்டியே விவாதித்து அதை ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் பிசிசிஐ எடுத்துச் செல்ல வேண்டும். அந்தக் கோரிக்கையை அவர்களும் மறுக்க முடியாது என்பதால் நாட்டுக்காக முக்கிய வீரர்கள் விளையாடுவது முக்கியம் என்பதை அன்புடன் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில் நமக்கு தேசமே முக்கியம்” என்று கூறினார்.

அத்துடன் 1983 உலகக்கோப்பை வெற்றியில் பங்காற்றிய ரோஜர் பின்னி ஏற்கனவே கர்நாடக கிரிக்கெட் வாரியத்தில் தலைவராக செயல்பட்டுள்ளதால் பிசிசிஐ தலைவராகவும் சிறப்பாக செயல்படுவார் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதில் முதலாவதாக இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் பணிச்சுமை பிரச்சினையில் தலையிட்டு அவர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Advertisement