ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது.
அந்த வரிசையில் இம்முறையும் வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்று சமீபத்தில் ரிக்கி பாண்டிங் முதல் நேதன் லயன் வரை ஆஸ்திரேலியாவின் முன்னாள் இந்நாள் வீரர்கள் சவால் விடுத்திருந்தனர். இந்நிலையில் தரமான அணிகளுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது தமக்கு மிகவும் பிடிக்கும் என நேதன் லயன் கூறியுள்ளார்.
தரமான இந்தியா:
அது போன்ற தரத்தை கொண்ட இந்தியாவை மீண்டும் எதிர்கொண்டு சவாலை கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைக்க காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஃப் ஸ்பின்னில் மாஸ்டர் என்றும் லயன் பாராட்டியுள்ளார். எனவே அஸ்வினை எப்போதும் மதித்து அவரிடம் சில விஷயங்களை கற்றுக் கொள்வதாகவும் நேதன் லயன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக போட்டியை கொடுக்க விரும்புகிறேன் என்பதை எனது கேரியர் முழுவதும் கூறியுள்ளேன். அந்த வகையில் இந்தியாவை நீங்கள் பார்க்கும் போது அவர்கள் அணியில் முழுமையாக சூப்பர் ஸ்டார்கள் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நீங்கள் போட்டியையும் சவாலையும் கொடுக்க விரும்புவீர்கள்”
மாஸ்டர் அஸ்வின்:
“அஸ்வினும் நானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானோம். நானும் அவரும் நிறைய தொடர்களில் எதிர் எதிராக போட்டியுடன் விளையாடியுள்ளோம். தற்போது அஸ்வினுக்கும் எனக்கும் இடையில் ஒன்றுமில்லை. அஸ்வினை நான் மதிக்கிறேன். அவருடைய பவுலிங்கை நான் பார்க்க விரும்புகிறேன்”
இதையும் படிங்க: டிராவிட் மாதிரி இல்லாம.. கெளதம் கம்பீர் அதுல ஒருதலைபட்சமாக இருக்காரு.. ரிஷப் பண்ட் பேட்டி
“அவர் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் மாஸ்டர். அவருக்கு எதிராக விளையாடுவதில் கௌரவமடையும் நான் அவரிடம் சில விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். கோடைகாலத்தில் இந்தியர்களை எங்களது மண்ணில் மீண்டும் எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இம்முறை 1992க்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.