என் மண்டைல முடி இல்லாம ஏன் வழுக்கை ஆச்சுன்னு இப்போ தான் புரியுது – நேதன் லயன் கலகலப்பான பேட்டி

Lyon
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் ஆரம்பத்திலேயே டிக்ளர் செய்து கையில் வைத்திருந்த வெற்றியை இங்கிலாந்து கோட்டை விட்டது அந்நாட்டவர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மறுபுறம் அந்த போட்டியில் கடைசி நேரத்தில் 44* ரன்கள் எடுத்த கேப்டன் பட் கமின்ஸ்க்கு உறுதுணையாக 16* ரன்கள் எடுத்த நேதன் லயன் 8 விக்கெட்களையும் சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளராக தனது கேரியரை துவங்கி நாளடைவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவர் கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறிப்பாக சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்த அவர் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் அந்நாட்டுக்காக அதிக விக்கெட்களை (495) எடுத்த ஸ்பின்னராக சாதனை படைத்து அசத்தி வருகிறார். மேலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனல் உட்பட கடந்த 10 வருடங்களில் அவர் ஆஸ்திரேலியாவின் நிறைய முக்கிய வெற்றிகளிலும் பங்காற்றி வருகிறார்.

வழுக்கை லயன்:
அந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதியான லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் களமிறங்கிய அவர் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய முதல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் தனித்துவமான உலக சாதனை படைத்தார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர், அலெஸ்டர் குக் போன்ற பேட்ஸ்மேன்கள் மட்டுமே அந்த சாதனையை படைத்துள்ள நிலையில் 2013 முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா விளையாடிய 100 போட்டிகளிலும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து களமிறங்கிய அவர் இந்த தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

Lyon

பொதுவாக 5 நாட்கள் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதே கடினம் என ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மெதுவாக ஒதுங்கி செல்லும் இந்த காலத்தில் 100 போட்டிகளை அதுவும் தொடர்ந்து இடைவெளியே விடாமல் விளையாடுவது உண்மையாகவே பெரிய சாதனையாகும். அதற்கு நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை கடைபிடிப்பது அவசியமாகும். இந்நிலையில் அழுத்தமான டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி சிறப்பாக தொடர்ந்து செயல்படலாம் என்று நினைத்தே தம்முடைய தலையில் முடியெல்லாம் உதிர்ந்து வழுக்கையானதை இப்போது தான் புரிந்து கொள்வதாக நேதன் லயன் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் முடி இல்லாமல் போனாலும் இந்த சாதனை என்றும் தலை நிமிர்ந்து நடக்கும் அளவுக்கு ஆழமாக தமது மனதிற்குள் பதிந்துள்ளதாக கலகலப்பை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இது நான் பெருமைப்படும் ஒன்றாகும். தொடர்ச்சியான 100 போட்டிகளில் விளையாடியுள்ளேன் என்ற சாதனை என்னுடைய தலையில் ஆழமாக பதிந்துள்ளது. மேலும் 100 டெஸ்ட் போட்டிகள் என்பது அதிகப்படியானது. அதில் நிறைய மேடு பள்ளங்களை நான் கடந்து வந்துள்ளேன். அதனால் இப்போது தான் என்னுடைய தலையில் முடியில்லாமல் இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை என்பதை உணர்கிறேன்”

“எந்த விளையாட்டு வீரர்களும் நீண்ட காலமாக விளையாடி வெற்றிகரமாக செயல்படுவதற்கு உங்களுடைய சுற்றி நல்ல மனம் கொண்ட நபர்கள் இருக்க வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணியை பற்றி நான் சொல்லவில்லை. என்னுடைய குடும்பம் தான் முழுமையான ஆதரவும் அன்பையும் கொடுத்து இந்த சாதனை படைக்க உதவியதாக நான் கருதுகிறேன். மேலும் டாம் கார்டர் என்னுடைய நண்பன் மற்றும் எனது உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் பின்னணியில் எனக்கு நிறைய உதவியுள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:நெட்ஸ்ல கூட பேட்டிங் செய்யாத ராகுலுக்கு பதில் அந்த தமிழக வீரருக்கு 2023 உ.கோ சான்ஸ் கொடுங்க – சிவராமகிருஷ்ணன் கோரிக்கை

அந்த நிலையில் இப்போட்டியில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 339/5 என்ற நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் விரைவில் பந்து வீசும் வாய்ப்பை பெறும் நேத்தன் லயன் இன்னும் 5 விக்கெட்டுகளை எடுத்து 500 விக்கெட்டுகளை எடுத்த பவுலராக மற்றொரு சாதனை படைக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement