Ashes 2023 : 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த பவுலரும் செய்யாத தனித்துவமான சாதனை படைத்த நேதன் லயன்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த போட்டியில் கடைசி நேரத்தில் 54 ரன்கள் தேவைப்பட்ட போது தில்லாக பேட்டிங் செய்த கேப்டன் பட் கமின்ஸ் 44* ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை விட கடைசி நேரத்தில் அவருக்கு உறுதுணையாக 16* ரன்கள் எடுத்த நேதன் லயன் மொத்தமாக 8 விக்கெட்டுகளை சாய்த்து அந்த வெற்றியில் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளராக கிரிக்கெட்டில் கால் பதித்த அவர் நாளடைவில் அதன் மீது அதிகப்படியான ஆர்வத்தால் விளையாட துவங்கி உள்ளூர் போட்டிகளில் அசத்தி கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஒருநாள் கிரிக்கெட்டில் 29 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு பெறாவிட்டாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு நிரந்தர ஸ்பின்னராக உருவெடுத்தார்.

- Advertisement -

சரித்திர சாதனை:
குறிப்பாக ஜாம்பவான் ஷேன் வார்னேவின் இடத்தில் பாதியை நிரப்பும் அளவுக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடிப்பதற்கும் உதவினார். அந்த வகையில் இதுவரை 121 போட்டிகளில் 495 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு அசத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.

அந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது ஆஷஸ் போட்டியில் களமிறங்கிய நேதன் லயன் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 100 போட்டிகளில் விளையாடிய முதல் பந்து வீச்சாளர் என்ற சரித்திர உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது கடந்த 2011இல் அறிமுகமாகி ஆரம்பத்தில் நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி இதே இங்கிலாந்து எதிரான தொடரின் 3வது போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

அப்போதிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி வரை கடந்த 10 வருடங்களில் ஆஸ்திரேலியா களமிறங்கிய 100 டெஸ்ட் போட்டிகளிலும் ஒன்றை கூட தவற விடாமல் நேதன் லயன் விளையாடியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய முதல் பவுலர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் 159, ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் 153, மார்க் வாக் 107, இந்தியாவின் சுனில் கவாஸ்கர் 106, நியூசிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம் 101 ஆகிய பேட்ஸ்மேன்கள் மட்டுமே தொடர்ந்து 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களாக சாதனை படைத்திருக்கின்றனர். ஆனால் பந்து வீச்சாளர்கள் வரிசையில் நேதன் லயன் தான் முதல் முறையாக இந்த தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 1992 – 2000 வரையிலான காலகட்டங்களில் 60 தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் இருக்கிறார். இந்த காலகட்டங்களில் விளையாடிய 100* போட்டிகளில் மட்டும் லயன் 419 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த நிலையில் உலக அளவில் அவரைப் போலவே இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் மொத்தமாக 92 போட்டிகளில் 474 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ : மைதானத்தில் புகுந்து ரகளை செய்த போராட்டக்காரர்கள், அலேக்காக தூக்கிய பேர்ஸ்டோ – கலாய்த்த அஸ்வின்

இருப்பினும் 2014 – 2018 வரையிலான காலகட்டங்களில் அஸ்வின் அதிகபட்சமாக வெறும் 36 தொடர்ச்சியான போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக வெளிநாடுகளில் சரிப்பட்டு வர மாட்டார் என்று இந்திய அணி நிர்வாகம் கழற்றி விடுவதால் அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட நிறைய போட்டிகளை தவற விட்டார். ஒருவேளை இவர் போல வாய்ப்பு கிடைத்திருந்தால் அஸ்வின் இந்நேரம் 100 போட்டிகளை தாண்டி விளையாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement