இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பிட்ச் பற்றி கடுமையாக விமர்சித்த ஆஸ்திரேலிய அணியினர் செயலில் படுமோசமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தனர். அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தையும் இந்தியாவிடம் இழந்துள்ள ஆஸ்திரேலியா டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் கொதித்தெழுந்து இத்தொடரை வெல்லும் முனைப்புடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் டூப்ளிகேட் ஸ்பின்னருக்கு எதிராக பயிற்சிகளை எடுத்தும் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு எதிராக சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்தனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் அசத்துவார் என்று இந்திய ரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நேதன் லயன் சுமாராக செயல்பட்டது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனாலும் சுழலுக்கு சாதகமில்லாத ஆஸ்திரேலியாவில் பிறந்து அங்குள்ள மைதானங்களில் விளையாடப் பழகி ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்குப் பின் நிலையான இடத்தைப் பிடித்து 450+ விக்கெட்களை எடுத்துள்ள அவர் அஷ்வின் போலவே மிகவும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமற்ற மைதானங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட அவர் இத்தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது தடுமாறுவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
அவரை பார்த்து கத்துக்கிறேன்:
ஆனால் அதில் முன்னேறுவதற்கு அஷ்வின் எப்படி பந்து வீசுகிறார் என்ற வீடியோக்களை கடந்த ஒரு மாதமாகவே பார்த்து கற்று வருவதாக நேதன் லயன் வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக நல்ல விஷயங்களை யாரிடம் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்ற வகையில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் அஸ்வினுக்கு எதிராக என்னை நானே குறித்து வைத்துக் கொள்ளப் போகிறேன். ஏனெனில் அஷ்வின் பந்து வீசும் விதமும் அவருடைய சாதனை புள்ளி விவரங்களும் அவர் எந்தளவுக்கு தரமானவர் என்பதை பேசுகின்றன”
“உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் அவரை விட வித்தியாசமான பவுலர். இருப்பினும் இங்கு வருவதற்கு முன்பாக அஷ்வின் பந்து வீசும் வீடியோக்களை நான் பார்த்தேனா? என்று நீங்கள் கேட்டால் ஆம் 100% சதவீதம் பார்த்துள்ளேன். குறிப்பாக எனது வீட்டில் நிறைய நேரங்களில் அவரது வீடியோக்களை லேப்டாப்பில் பார்த்துள்ளேன். அதற்காக எனது மனைவி கூட சில நேரங்களில் கோபப்படுவார். இருப்பினும் இவை அனைத்தும் கற்றுக் கொள்வதற்காகும். இந்த விளையாட்டைப் பொறுத்த வரை நாம் தொடர்ந்து என்ன கற்றுக்கொண்டு எப்படி முன்னேறுகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக எதிரணியை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்வது மிகப்பெரிய விஷயமாகும்”
“அத்துடன் வெளி உலகில் நானும் அவரும் எதிராளிகள் என்று நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர் எப்போதுமே எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். அவருடன் உட்கார்ந்து பேசும் போது அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது இருக்கிறது. இங்கே மட்டுமல்லாது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் அவர் எனக்கு சிலவற்றை கற்றுக் கொடுத்தார். அவரிடம் உள்ள 2 தனித்துவமான திறமைகளை நானும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதனால் என்னால் சிறந்து விளங்க முடியும் என்று நான் உறுதியாக உணர்கிறேன். எனவே அது தான் என்னை இயக்குகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆஸியை மிஞ்சிய இந்தியா, ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் முதல் அணியாக புதிய உலகசாதனை – ரசிகர்கள் பெருமிதம்
அதாவது எதிரணியை சேர்ந்தவர் என்றாலும் அஷ்வினிடம் ஆரம்பம் முதலே நிறைய நுணுக்கங்களை கற்று வருவதாக தெரிவிக்கும் நேதன் லயன் வெளி உலகத்திற்கு நாங்கள் எதிராளிகள் போல் தெரிந்தாலும் உண்மையில் நல்ல நண்பர்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அத்துடன் கற்றுக்கொள்ள வேண்டிய தரமான வீரர்கள் எதிரணியில் இருந்தாலும் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று அவர் பேசியுள்ளது இந்திய ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.