
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக மாறியுள்ள சேலத்தை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் தான் அறிமுகமான இது தொடரிலேயே சிறப்பான பவுலர் என்று பெயரெடுத்த நடராஜனுக்கு ரசிகர்கள் இந்திய அளவில் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய தொடர் முடிந்து நாடு திரும்பிய நடராஜன் ரசிகர்களின் கோலாகல வரவேற்பிற்கு பின் தனது வீட்டில் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று பழனி முருகன் கோயில் சென்றார். அங்கு சென்ற நடராஜன் கோயில் அடிவாரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தார். நடராஜனின் வருகையை அறிந்த ரசிகர்கள் பொதுமக்கள் அவரை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் நடராஜன் செல்பி எடுத்துக்கொள்ள முட்டி மோதியதால் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக நடராஜனை காரில் அழைத்துச் சென்றனர். நடராஜனுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் இறுதியில் அவருக்கு குழந்தை பிறந்தது அதுமட்டுமின்றி அடுத்த சில வாரத்திலேயே இந்திய அணியில் விளையாட வாய்ப்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 நல்ல விடயங்களும் நடைபெற்றதால் அவர் பழனிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.