
இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 471 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 465 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார். அடுத்ததாக விளையாடும் இந்தியா 3வது நாள் முடிவில் 90/2 ரன்களை எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இப்போட்டியில் ஜோ ரூட், பென் டக்கெட் போன்ற தரமான இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஜஸ்ப்ரித் பும்ரா ஆரம்பத்திலேயே அவுட்டாக்கினார். ஆனால் அவரது பந்து வீச்சில் ஹரி ப்ரூக் கொடுத்த 3 கேட்ச்களை ஜடேஜா மற்றும் ஜெய்ஸ்வால் தவற விட்டது ரசிகர்களை கடுப்பேற்றியது. அப்போது கோபப்படாத பும்ரா மேற்கொண்டு யாரையும் நம்பாமல் கிறிஸ் ஓக்ஸ், ஜோஸ் டாங் ஆகியோரை கிளீன் போல்ட்டாக்கி தமக்கு தாமே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே போல ஜஸ்ப்ரித் பும்ரா பேட்ஸ்மேன்களின் தடுப்பாட்டத்தை தன்னுடைய மாயாஜால பந்துகளால் ஏமாற்றி உடைத்து கிளீன் போல்ட்டாக்குவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட பும்ரா இத்தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினால் கூட இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து நிறைய விக்கெட்டுகளை அள்ளுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நாசர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா காயங்கால் இல்லாமல் இருப்பார் என்றும் அவரைப்பற்றி நிறைய வருடங்கள் பேசுவோம் என்று நம்புகிறோம். கிரிக்கெட்டில் பார்க்க 2 அற்புதமான விஷயங்கள் உள்ளன. ஒன்று ஷேன் வார்னே போன்ற மணிக்கட்டு ஸ்பின்னர் பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவது”
இதையும் படிங்க: 6, 4.. வருண் மாஸ் ஃபினிஷிங்.. அஸ்வின் ஆல் ரவுண்டராக மிரட்டல்.. திண்டுக்கல் த்ரில் வெற்றி பெற்றது எப்படி?
“மற்றொன்று பும்ரா போன்ற உண்மையான வேகப்பந்து வீச்சாளர் பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவது. பும்ரா முற்றிலும் ஒரு ஜீனியஸ் (மேதை). இந்த ஒரு வார்த்தை தான் அவருக்கு பொருந்தும். நீங்கள் அவரது ஆக்சனை பிரதியெடுக்க விரும்ப மாட்டீர்கள். அவரைப் போல் விளையாட முயற்சி செய்யுங்கள் என்று சிறுவர், சிறுமிகளிடம் கூற விரும்ப மாட்டீர்கள். நாம் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். கலையைப் போல் பவுலிங் செய்யும் அவர் இங்கிலாந்து அணிக்கும் முள்ளாக இருக்கப் போகிறார். 5 இல்லாவிட்டாலும் 3 போட்டிகளில் விளையாடினால் கூட அவர் நிறைய விக்கெட்களை வீழ்த்துவார்” என்று கூறினார்.