இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளையாடி வந்த அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை குவித்துள்ளார். மேலும் 30 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.
2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2016 – 2021 வரை இந்தியாவை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
விடை பெற்ற கிங் கோலி:
அப்படிப்பட்ட அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓய்வு பெற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் இனிமேலும் 100% அர்ப்பணிப்புடன் விளையாட முடியாது என்று கருதியதாலேயே விராட் கோலி ஓய்வு பெற்றதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“கடந்த 14 வருடங்களாக நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். அவரின் தரத்தை அவருடைய புள்ளிவிவரங்கள் பேசும். அவர் அதையும் தாண்டிய திறமையைக் கொண்டுள்ளார். அவருடைய ஒளி, ஸ்டைல், ஆர்வம் ஆகியவை அபாரமானது. இந்திய ரசிகர்களுக்கு கிரிக்கெட் என்றால் மிகப்பெரியது என்பது நமக்குத் தெரியும். அவர்கள் அதை தங்களுடைய கேப்டன் காண்பிப்பதை விரும்பினார்கள்”
மாபெரும் சக்தியாக:
“இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கோலியை விட வேறு யாரும் வெளிப்படுத்தவில்லை. மிகவும் நம்ப முடியாத வீரராக செயல்பட்ட அவர் இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மாற்றி 42 மாதங்கள் அங்கேயே நிற்க வைத்தார். அவர் இந்தியா கிரிக்கெட்டை விளையாடும் விதத்தை முற்றிலும் மாற்றினார். விராட் கோலி அல்டிமேட் வின்னர்”
இதையும் படிங்க: உண்மையில் அந்த விடயம் ரொம்ப கஷ்டம் தான்.. ஆனாலும் இந்தியா கிட்ட டேலன்ட் இருக்கு – ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து
“வெற்றியை மட்டுமே தன்னுடைய இலக்காகப் பார்த்த அவர் அதற்காக வெறித்தனமாக இருந்தார். சேசிங் செய்வதில் அவர் ஏன் சிறந்தவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏனெனில் அவர் களத்திற்கு 100% பங்களிப்பைக் கொடுக்கும் எண்ணத்துடன் செல்வார். என்னுடைய சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன் என்ற எண்ணத்துடன் என்று அவர் எப்போதும் களத்துக்குச் செல்ல மாட்டார். அதுவே அவருடைய ஓய்வு முடிவில் பங்காற்றியிருக்கலாம். சாதாரண கிரிக்கெட்டராக இருக்க விரும்பாத அவர் சமீப காலங்களில் அங்கேயும் இங்கேயும் தடுமாறினார். இருப்பினும் அவர் இன்று இருக்கும் சக்தியாக இந்தியாவை உருவாக்கியவர்” என்று கூறினார்.



