
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்திய அணி பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து 10ஆம் தேதி கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3வது போட்டி துவங்குகிறது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அப்போது பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக அவருக்கு இந்திய அணி 2வது போட்டியில் ஓய்வு கொடுத்தது.
அதன் காரணமாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் முதல் போட்டிக்கும் பின் 15 நாட்கள் ஓய்வெடுத்து வரும் ஜஸ்ப்ரித் பும்ரா 3வது போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அதனால் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் கெளரவப் பலகையில் அவர் தம்முடைய பெயரை பொன்னெழுத்துக்களால் எழுதுவார் என்றும் நாசர் ஹுசைன் கணித்துள்ளார்.
அதன் காரணமாக இந்தியா வெற்றி பெறும் என்று தெரிவிக்கும் அவர் இங்கிலாந்து அணி ஜோப்ரா ஆர்ச்சர், அட்கின்ஷன் ஆகியோரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “கடந்தப் போட்டியில் இந்தியா சூழ்ச்சியை செய்தது போல் நீங்கள் உணர்ந்தீர்கள். ஜஸ்ப்ரித் பும்ராவை எடுக்காமல் விட்டதற்காக இந்தியாவை பலரும் விமர்சித்தார்கள்”
“பும்ரா இல்லாமல் எப்படி இந்தியா 20 விக்கெட்டுகள் எடுக்கப் போகிறது என்று பேசினார்கள். ஆனால் அவர்கள் பர்மிங்காமில் மிகவும் ஃபிளாட்டான பிட்ச்சில் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். தற்போது லார்ட்ஸ் போட்டியில் இந்தியா தங்களுடைய துருப்புச்சீட்டுடன் விளையாடப் போகிறார்கள். அங்கே ஏற்கனவே நன்றாக பவுலிங் செய்துள்ள அனுபவத்தைக் கொண்டுள்ள பும்ரா 2 வார ஓய்வுக்குப் பின் வருவதால் கெளரவப் பலகையில் இடம் பெற விரும்புவார்”
இதையும் படிங்க: இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல் மட்டுமே அதுக்கு சமமாக இருக்கும்.. லண்டனில் விராட் கோலி பேட்டி
“மறுபுறம் இங்கிலாந்து ஒன்று சோர்வடைந்த பவுலர்களை விளையாட வைக்க வேண்டும் அல்லது 4 வருடங்கள் கழித்து வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் அட்கின்சன் ஆகியோரை விளையாட வைக்கலாம். ஸ்டோக்ஸ் களத்தில் மட்டுமல்ல களத்திற்கு வெளியேயும் களைப்பாக காணப்படுகிறார். ஒரு கேப்டனின் அந்தப் பக்கத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதனாலேயே பும்ராவுக்கு ஓய்வு கொடுத்த கில் கேள்விகளை கதவுக்கு வெளியே மூடினார்” என்று கூறினார்.