
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூலை 7ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. வரலாற்றின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷமி, ரவீந்திர ஜடேஜா, புஜாரா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் நம்பர் 2 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஸ்டார்க், பட் கமின்ஸ், மார்னஸ் லபுஸ்ஷேன் போன்ற க்ளாஸ் நிறைந்த நட்சத்திர வீரர்களும் இருப்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐசிசி ஃபைனல்களில் எப்போதுமே வெற்றிகரமாக செயல்பட்டு ஏற்கனவே 5 உலகக் கோப்பையும் டி20 உலக கோப்பையும் வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வெல்ல தயாராகியுள்ளது. அத்துடன் தங்கள் நாட்டில் இருக்கும் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் தான் இங்கிலாந்திலும் இருக்கும் என்பதால் இப்போட்டியில் இந்தியாவை விட கமின்ஸ், ஸ்டார்க் போன்ற தரமான பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள ஆஸ்திரேலியா வெல்லும் என்று நிறைய கணிப்புகள் காணப்படுகின்றது.
திறமை இருக்கு:
மறுபுறம் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது. அதை விட கிரிக்கெட்டின் அசுரனாக இருக்கும் ஆஸ்திரேலியாவை 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய அணியாக சாதனை படைத்துள்ள இந்தியா சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் தொடரிலும் வென்ற மாபெரும் தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது.
இந்நிலையில் சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த ஊரிலேயே தோற்கடித்த பெருமை கொண்ட இந்தியா இப்போட்டியில் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் அதற்கு இங்கிலாந்தின் கால சூழ்நிலைகளை சரியாக கணித்து தரமான 11 பேர் அணியை களமிறக்குவது முக்கியம் என்று கூறியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சௌதம்டன் நகரில் நடைபெற்ற கடந்த ஃபைனலில் வானிலை மற்றும் சூழ்நிலைகளை தவறாக கணித்து 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய தவறை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“இந்தியா இந்த உலகின் எந்த சூழ்நிலைகளிலும் தங்களால் வெல்ல முடியும் என்பதை ஆஸ்திரேலியாவில் காண்பித்தது. மேலும் ஓவல் மைதானத்திலும் இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. குறிப்பாக கடைசியாக இங்கு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை அவர்கள் வீழ்த்தினர். எனவே இது சமமான மைதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓவல் மைதானத்தில் சூரிய வெளிச்சம் நன்றாக இருந்தால் அவர்கள் 2 ஸ்பின்னர்களையும் மற்றும் ஷார்துல் தாக்கூரை 3வது வேகப்பந்து வீச்சாளராகவும் பயன்படுத்தலாம்”
“ஆனால் கடந்த ஃபைனலில் கால சூழ்நிலைகளை இந்தியா முற்றிலும் தவறாக படித்து விட்டது. ஏனெனில் 5 நாட்களும் மின்விளக்குகள் எரிந்த அந்தப் போட்டி மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையில் நடந்தது. அதில் ஸ்பின்னரை பயன்படுத்தாமல் நியூசிலாந்து வென்றது. மறுபுறம் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இருப்பினும் இம்முறை வானிலையை பொறுத்து நான் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரையும் தேர்வு செய்வேன். அவர்கள் பேட்டிங்கில் பெரிய ஆழத்தை ஏற்படுத்துவார்கள்”
இதையும் படிங்க:WTC Final : இந்த ஒரு போட்டி தான் இருக்கு. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்திய வீரர்களை எச்சரித்த – விராட் கோலி
“குறிப்பாக இங்கிலாந்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அதே சமயம் மேகமூட்டத்துடன் கூடிய மழைக்கான சூழ்நிலை நிலவினால் கடந்த ஃபைனலில் செய்த தவறை அவர்கள் மீண்டும் செய்யக்கூடாது. எனவே நானாக இருந்தால் போட்டி துவங்கும் நாளன்று வானிலையை பார்த்து விட்டு அணியை தேர்வு செய்வேன். ஆனால் மகத்தான பவுலர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்துவார்கள் என்பதை மறக்க கூடாது” என்று கூறினார்.