இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அப்போது விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போல இந்திய அணியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் சுப்மன் கில் தடுமாறுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்தார்.
அவருடைய அனுபவமின்மையால் 3 – 4 வீரர்கள் சேர்ந்து இந்திய அணியை கட்டுப்படுத்துவதாகவும் ஹுசைன் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஆனால் 2வது போட்டியில் பேட்டிங்கில் 430 ரன்களை குவித்த சுப்மன் கில் தனியாளாக இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டனாகவும் கில் வரலாற்றுச் சாதனைகளை படைத்தார்.
அபார கேப்டன்ஷிப்:
இந்நிலையில் சுப்மன் கில் தொடர்ந்து தம்முடைய சொந்த வழியில் கேப்டனாக செயல்பட்டால் போதும் என்று நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். எனவே விராட் கோலியை போல அவர் இருக்கத் தேவையில்லை என்றும் ஹுசைன் தெரிவித்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் மாலையில் 2 விக்கெட்டுகள் எடுத்தப் பகுதியிலிருந்து ஆகாஷ் தீப்பை மாற்றிய சுப்மன் கில் 5வது நாளில் எதிர்புறம் பந்து வீச வைத்தது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கேப்டன்ஷிப் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம் என்று நான் கருதவில்லை. தோல்வியை சந்திக்கும் போது கேப்டன் அதை செய்யவில்லை என்று விமர்சிப்பதும், வெற்றி பெறும் போது சிறந்த கேப்டன் என்று பாராட்டுவதும் எளிது. ஆனால் வர்ணனையாளர் அறையிலிருந்து பார்க்கும் போது அவருக்கு நிறைய வீரர்கள் உள்ளீடுகளைக் கொடுத்தார்கள்”
கோலி போல வேண்டாம்:
“அதனால் யார் கேப்டனாக இருக்கிறார் என்ற கேள்வி உங்களிடம் எழுந்தது. ஆனால் 2வது போட்டியில் சுப்மன் கில் ஃபீல்டர்களை சிறப்பாக நகர்த்தி தலைமைத் தாங்கினார். ரிஷப் பண்ட், ராகுல் உதவி செய்தாலும் அவர் அணியை முழுமையாக கட்டுப்படுத்தியது தெரிந்தது. பொறுமையும் அமைதியும் கொண்ட அவர் விராட் கோலியை போன்ற கேரக்டரைக் கொண்டிருக்கப் போவதில்லை”
இதையும் படிங்க: காபா டூ பர்மிங்காம்.. பும்ரா இல்லனா விஸ்வரூபம்.. 3 கோட்டைகளை இந்தியா உடைக்க உதவிய சிராஜ்
“மொத்த இந்தியாவும் பார்க்கும் அணியை நீங்கள் அமைதியுடன் வழி நடத்துவதே சிறந்தது. அவர் நாம் செய்ய விரும்பாத சில நுட்பமான விஷயங்களைச் செய்தார். இந்தப் பக்கத்தில் அழகாக பவுலிங் செய்து கொண்டிருந்த ஆகாஷ் தீப்பை அடுத்த நாள் காலையில் அவர் அந்தப் பக்கம் பவுலிங் செய்ய வைத்தார். அது வேலையும் செய்தது. தம்முடைய முதன்மை வேலையான பேட்டிங்கிலும் அவர் ரன்களை குவித்துள்ளார்” என்று பாராட்டினார்.



