பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி ராவில்பிண்டி நகரில் நடைபெற்ற வருகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய 2 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171, சௌட் ஷாக்கீல் 141 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்முட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அபாரமாக பேட்டிங் செய்து 565 ரன்கள் குவித்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வங்கதேசம் புதிய சாதனையும் படைத்தது.
பரிதாப பாகிஸ்தான்:
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் முஸ்பிகர் ரஹீம் சதமடித்து 191, சத்மன் இஸ்லாம் 93 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நாசீம் ஷான் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதன் பின் விளையாடும் பாகிஸ்தான் 4வது நாள் முடிவில் 23 ரன்கள் எடுத்துள்ளது. தற்சமயத்தில் வங்கதேசத்தை விட 94 ரன்கள் பின்தங்கியுள்ளதால் பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில் ராவில்பிண்டி பிட்ச் தார் ரோட் போல ஃபிளாட்டாக இருப்பதால் 3, 4வது நாளில் கூட தங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என பாகிஸ்தான் வீரர் நாசீம் ஷா தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஒருதலைபட்சமான பிட்ச்சை அமைத்தால் சொந்த மண்ணில் வெல்வது கடினம் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தார் ரோட் பிட்ச்:
எனவே பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான பிட்ச்சை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியத்திற்கு பரிதாப கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி நான்காவது நாள் முடிவில் பேசியது பின்வருமாறு. “இது போன்ற பிட்ச்சில் நாங்கள் நிறைய தொடர்களில் விளையாடி விட்டோம் என்று நினைக்கிறேன். அவர்கள் பவுலர்களுக்கு உதவி அளிக்கக்கூடிய பிட்ச்சை உருவாக்க முடிந்தளவுக்கு முயற்சித்துள்ளனர்”
இதையும் படிங்க: இந்திய அணியில் 37 வயதாகும் அஸ்வின்.. இடத்தை அடுத்ததாக நிரப்ப அவர் தான் தகுதியானவர்.. டிகே கருத்து
“ஆனால் வெப்பம் காரணமாக அது புதிய பந்தில் மட்டுமே உதவிகரமாக இருக்கிறது. சூழ்நிலை செட்டிலான பின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. எனவே சாதகமாக பிட்ச்சை மாற்றியமைத்து சொந்த மண் சாதகத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை வேகத்துக்கு சாதகமான பிட்ச் இல்லையென்றால் அதை சுழலுக்கு சாதகமாக முயற்சித்து பார்க்கலாம். அப்படியும் நம்மால் ரசிகர்களை மகிழ்விக்க முடியும். வேப்கபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் உருவாக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இங்குள்ள சூழ்நிலை அதற்கு உதவவில்லை” என்று கூறினார்.



