பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் தொடர்ந்து வெற்றிகளை பெறுவதற்கு தடுமாறும் பாகிஸ்தான் சமீப காலங்களில் கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. எடுத்துக்காட்டாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் முதல் முறையாக தோற்ற அந்த அணி 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் மண்ணை கவ்வியது.
அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அது போக இந்தியாவிடம் வெறும் 120 ரன்களை அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அப்போது பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமையில்லை என்று புதிய வெள்ளைப்பந்து பயிற்சியாளராக பொறுப்பேற்ற கேரி கிர்ஷ்டன் தெரிவித்திருந்தார்.
மொழி பிரச்சனை:
அதனால் தம்முடைய பயிற்சியாளர் கேரியரில் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்றும் அவர் கூறியிருந்தார். 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் பயிற்சியாளரான அவரே அப்படி சொன்னது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதற்கு முன்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி பொறுப்பேற்றுள்ளார். ஆனால் கேரி க்ரிஸ்டன், கிலஸ்பி போன்ற வெளிநாட்டு பயிற்சியாளர்களான தாங்கள் நினைப்பதை பாகிஸ்தானி மொழியில் பேச முடியவில்லை என நாசீம் ஷா தெரிவித்துள்ளார். ஏனெனில் தங்களைப் போன்ற சில பாகிஸ்தான் வீரர்களுக்கு முழுமையாக ஆங்கிலம் தெரியாது என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் மொழி பிரச்சனை இருக்கிறது. சில வீரர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் சிலருக்கு அவர்களிடம் பேசுவதற்கு மொழியை மொழி பெயர்க்க ஒருவர் தேவைப்படுகிறது. உண்மையில் உங்களுடைய சொந்த மொழியில் பயிற்சியாளருடன் தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும். குறிப்பாக சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டியது இருக்கும்”
இதையும் படிங்க: 4வது இடம் விளையாட்டா போச்சு.. 2023க்குப்பின் அதிக ரன்ஸ் அடிச்ச அவரோட சான்ஸ் முடிஞ்சுதா? ஆகாஷ் சோப்ரா
“ஆனால் அப்போது நீங்கள் மொழிபெயர்ப்பாளருடன் பயிற்சியாளரை காண வேண்டியுள்ளது” என்று கூறினார். அத்துடன் காயத்திலிருந்து மீண்டும் நாட்டுக்காக விளையாடுவதற்கு முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் நாசீம் ஷா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.