டி20 உ.கோ 2022 : முதல் போட்டியிலேயே அதிர்ச்சி, ஆசிய சாம்பியனை அலேக்காக சாய்த்த நமீபியா – குவியும் வாழ்த்துக்கள்

- Advertisement -

உலக டி20 கிரிகெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாகத் துவங்கியது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணி இந்தியா உட்பட டாப் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அந்த நிலையில் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று இன்று துவங்கியது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் இன்றைய முதல் போட்டியில் மோதின.

அதில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற மினி உலகக் கோப்பையை போன்ற 15வது ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அசால்டாக தோற்கடித்து ஆசிய கிரிக்கெட் சாம்பியனாக முடிசூடிய இலங்கை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கீலோங் நகரில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நமீபியாவுக்கு லிங்கேன் 3 (6), லா காக் 9 (9) என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

- Advertisement -

நமீபியா மாஸ்:
போதாக்குறைக்கு மிடில் ஆர்டரில் லோப்ட்டி-ஈட்டோன் 20 (12) கேப்டன் எரஸ்மஸ் 20 (24) ஸ்டீபன் பார்ட் 26 (24) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதைவிட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வீஸ் கோல்டன் டக் அவுட்டானதால் 14.2 ஓவரில் 93/6 என திண்டாடிய அந்த அணியின் கதை முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்போது களமிறங்கி கடைசி 5 ஓவர்களில் இலங்கை பவுலர்கள் சூறையாடி 7வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜான் பிரைலிங்க் 4 பவுண்டரியுடன் 44 (28) ரன்களில் ரன் அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ஜேஜே ஸ்மித் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 31* (16) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார்.

அதனால் தப்பிய நமீபியா 20 ஓவர்களில் 163/7 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 9 (10) குசல் மெண்டிஸ் 6 (6) என தொடக்க வீரர்களை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கிய நமீபியா டீ சில்வா 12 (11) குணதிலகா 0 (1) என அடுத்து வந்த முக்கிய வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்தது. அதனால் 40/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்ற முயன்ற கேப்டனாக சனாகா அதிகபட்சமாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் 29 (23) ரன்களில் அவுட்டாக அவருடன் போராடிய ராஜபக்சேவும் 20 (21) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் இலங்கையின் வெற்றி கேள்விக்குறியான நிலையில் கடைசி நம்பிக்கையான கருணரத்னே 5 (8) ரன்களிலும் ஹஸரங்கா 4 (8) ரன்களிலும் ஆட்டமிழந்து தோல்வியை உறுதி செய்தனர். ஏனெனில் அடுத்து வந்த வீரர்களும் நமீபியாவின் அனலான பந்து வீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அந்தளவுக்கு அபாரமாக பந்து வீசிய நமீபியா சார்பில் அதிகபட்சமாக டேவிஸ் வீஸ், ஸ்கூல்ட்ஸ், ஷிக்காங்கோ, பிரைலிங்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அப்படி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாய்த்த நமீபியா இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அனைவரும் தங்களை திரும்பிப் பார்க்கும் ஆசிய சாம்பியன் இலங்கையை அசால்டாக தோற்கடித்து குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த வெற்றிக்கு 44 ரன்கள் மற்றும் 2 விக்கெட்களை எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய ஜான் பிரைலிங்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி வரலாற்று வெற்றியை பதிவு செய்த அந்த அணிக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் ஏராளமான முன்னாள் இன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை முதல் போட்டியிலேயே அதுவும் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள நமீபியாவிடம் மண்ணை கவ்வியது அந்நாட்டவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறிய அந்த அணி ஆசிய கோப்பையை வென்றதால் மறுமலர்ச்சி கண்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் உலக கோப்பையில் இப்படி ஆரம்பத்திலேயே தோற்றதை பார்க்கும் ரசிகர்கள் மீண்டும் இலங்கை பழைய பார்முக்கு திரும்பி விட்டதாக சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement