ஐபிஎல் 11வது சீசன் இன்று மாலை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இன்றைய தொடக்கவிழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தவுள்ளனர். இந்நிலையில் நாட்டின் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளினால் வழக்கத்தை விட இந்தாண்டு சில மைதானங்களுக்கு உட்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்திற்கு நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் மே19 தேதி வரை ராஜீவ்காந்தி மைதானத்திற்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. இதுமட்டுமில்லாமல் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், அவர்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையிலும் தனிப்பிரிவு ஒன்றும் செயல்படவுள்ளது.
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி விளையாடிடும் ஏழு போட்டிகள் இந்த உள்ளூர் மைதானத்தில் நடைபெறாவுள்ளது குறிப்பிடத்தக்கது.சென்ற முறை இங்கு 1800 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இம்முறை அதைவிட அதிகமாக 2500 காவலர்கள் இந்த மைதானத்திற்கு பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். 8 ஆம்புலன்ஸ் மற்றும் 5 தீயனைப்பு வாகனங்களும் 24மணி நேரமும் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாம்.
சுமார் 38000 ரசிகர்கள் அமரக்கூடிய வசதியுள்ள இந்த மைதானத்தை சுற்றி 100 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது.பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.