பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு போட்டியில் வங்கதேசம் வென்று வரலாறு படைத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதல் முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் சரித்திரம் படைத்தது.
அந்த வெற்றி அரசியல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச மக்களிடம் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த வெற்றிக் கோப்பையை உலகக் கோப்பை வென்றதற்கு நிகராக தம்முடைய தலையணையில் வைத்து வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ உறங்கிய புகைப்படங்கள் வைரலானது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்திய தொடர்:
பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா கடந்த 12 வருடங்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. அதனால் இம்முறையும் வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்றே இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகர் ரஹீம், மெஹதி ஹசன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் வெற்றிக்கு பின் நஜ்முல் சாண்டோ கூறியிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார். எனவே புதிய திட்டத்துடன் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் இந்தியா உட்பட எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இந்தியாவையும் வீழ்த்துவோம்:
“அந்தத் தொடரில் கிடைத்த வெற்றியால் எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். அந்த வெற்றியால் எங்கள் அணியின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். எனவே நாங்கள் புதிய திட்டத்துடன் வருவது அவசியம். அங்கே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் எங்களால் நல்ல முடிவுகளை சாதிக்க முடியும்”
இதையும் படிங்க: 94/7 டூ 321 ரன்ஸ்.. 16 ஃபோர்ஸ் 5 சிக்ஸ்.. டெயில் எண்டரிடம் திணறிய கேப்டன் சுப்மன் கில்.. முஷீர் கான் பதிலடி
“ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறுவதற்காகவே விளையாட வேண்டும் என்ற அணுகு முறையை நாங்கள் கையாள்கிறோம். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டை பாகிஸ்தான் தொடரை வென்று நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே இப்படியே தொடர்ந்து விளையாடினால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.