- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs BAN : சரித்திரத்தை மாற்றி எழுதிய வங்கதேச ஜோடி வெற்றிக்கு போராட்டம்? கடைசி நாளில் சாதிக்குமா இந்தியா – விவரம் இதோ

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 404 ரன்கள் குவித்தது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 4 ஆம் தேதியன்று துவங்கிய அப்போட்டியில் கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, அஷ்வின் 58 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ரன்களைக் குவித்து இந்தியாவை மீட்டெடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹஸன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணி முதல் பந்திலிருந்தே இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹீம் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை சாய்த்தார். அதை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா 258/2 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக புஜாரா 1443 நாட்கள் கழித்து சதமடித்து 102* ரன்களும் இளம் வீரர் சுப்மன் கில் முதல் முறையாக சதமடித்து 110 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

சரித்திர ஜோடி:
அதை தொடர்ந்து 513 ரன்களை துரத்துவதற்கு களமிறங்கிய வங்கதேசத்திற்கு இம்முறை ஆரம்பத்திலே நங்கூரத்தை போட்ட ஓப்பனிங் ஜோடி எளிதில் விக்கெட்டை விடக்கூடாது என்ற எண்ணத்துடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே காலியான இந்த ஜோடி 2வது இன்னிங்ஸில் அப்படியே நேர்மாறாக இந்திய பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. இவர்களை பிரிக்க முடியாமல் அனைத்து இந்திய பவுலர்களும் திணறிய நிலையில் 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்ம சொப்பனமாக அமைந்த இந்த ஜோடியில் ஒரு வழியாக உமேஷ் யாதவ் பந்தில் 7 பவுண்டரியுடன் சாண்டோ 67 ரன்களில் அவுட்டானார்.

சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் வங்கதேச ஓப்பனிங் ஜோடி என்ற புதிய வரலாற்று சரித்திர சாதனையும் இவர்கள் படைத்தனர். அந்த பட்டியல்:
1. நஜ்முல் சாண்டோ – ஜாகிர் ஹசன் : 124, 2022*
2. இம்ருள் கைஸ் – தமீம் இக்பால் : 53, 2010
3. ஜாவேத் ஓமர் – நபீஸ் இஃபால் : 48, 2004

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த யாசிர் அலி 5 ரன்களில் அவுட்டாண்ட நிலையில் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் மீண்டும் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 13 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 100 ரன்கள் எடுத்து அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியில் விளையாடும் அவர் இந்த சதத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த 4வது வங்கதேச வீரர் என்ற பெருமையும் 2012க்கும் அறிமுகப் போட்டியில் சதமடிக்கும் முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

இருப்பினும் அவரை தொடர்ந்து வந்த அனுபவ வீரர் முஷ்பிகர் ரஹீமை 23 ரன்களில் காலி செய்த அக்சர் படேல் நூருல் ஹுசைனை 3 ரன்னில் அவுட்டாக்கினர். இறுதியில் 4வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 272/6 ரன்கள் எடுத்துள்ள வங்கதேசம் இன்னும் இந்தியாவை விட 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் கேப்டன் சாகிப் அல்சன் நங்கூரமாக 40* ரன்களுடன் வெற்றிக்கு போராடும் நிலையில் எதிர்ப்புறம் ஒருநாள் தொடரில் தனி ஒருவனாக இந்தியாவை தோற்கடித்த மெகதி ஹசன் 9* (40) ரன்களுடன் உள்ளார்.

இதையும் படிங்க: சுப்மன் கில் அடிச்ச செஞ்சுரியால இன்னொருத்தருக்கு கெட்ட காலம் பொறந்துடிச்சி – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

தற்போது வரை இந்தியாவுக்கு அதிகபட்சமாக அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தற்போதைய நிலைமையில் கடைசி 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகவே இருக்கிறது. இருப்பினும் சாகிப் அல் ஹசன் – மெஹதி ஹசன் ஆகிய 2 அனுபவமிக்க வீரர்கள் கடைசி நாளில் நங்கூரத்தை போட்டால் வங்கதேசம் இப்போட்டியை டிரா செய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே அவர்களை எந்தளவுக்கு விரைவாக இந்தியா அவுட்டாக்கிறதோ அந்தளவுக்கு பெரிய வெற்றி வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by