இந்தியாவின் புகழ்பெற்ற துலீப் கோப்பை 2025 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் செமி ஃபைனல் சுற்று செப்டம்பர் 4ஆம் தேதி துவங்கியது. அதில் பெங்களூருவில் நடைபெறும் முதல் செமி ஃபைனல் போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தெற்கு மண்டல அணிக்கு தன்மய் அகர்வால் மற்றும் தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன் ஆகியோர் ஆரம்பத்திலேயே நங்கூரமாக விளையாடினர். புதிய பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடிய அந்த ஜோடி 31 ஓவரில் 103 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. அதில் அரை சதத்தை நழுவ விட்ட அகர்வால் 43 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
தாங்கும் ஜெகதீசன்:
அடுத்ததாக வந்த தேவ்தூத் படிக்கல் கொஞ்சம் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெகதீசன் அரை சதத்தை கடந்து அசத்தினார். மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடிய படிக்கல் அரை சதத்தை அடித்து 2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 57 (71) ரன்களில் அவுட்டாகி சென்றார்.
அடுத்து வந்த மோஹித் காலே நிதானமாக விளையாட முயற்சித்து நிசாந்த் சிந்து வேகத்தில் 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து வடக்கு மண்டல அணிக்கு சவாலைக் கொடுத்த ஜெகதீசன் சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் முதல் நாள் முடிவில் அவுட்டாகாமல் 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் 148* (260) ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.
அசத்தல் சதம்:
அவருடன் கேப்டன் முகமது அசாருதீன் 11* ரன்கள் எடுத்ததால் முதல் நாள் முடிவில் தெற்கு மண்டலம் 297/3 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளது. கடந்த 10 வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் ஜெகதீசன் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனாலேயே சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கடைசிப் போட்டியில் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவர் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் இவர் இந்திய பிளேயிங் லெவனில் விளையாடனும் – மதன் லால் கருத்து
அந்த வகையில் உள்ளூரில் போராடும் அவர் இந்திய அணியை நெருங்கியுள்ளார் என்றே சொல்லலாம். அந்த வாய்ப்பை உறுதியாக பிடிப்பதற்கு இந்தப் போட்டியில் ஜெகதீசன் இரட்டை சதம் போன்ற பெரிய ஸ்கோரை அடிப்பது அவசியமாகிறது. அப்படி தொடர்ச்சியாக அசத்தினால் நிச்சயம் அவருக்கு ஒருநாள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.



