
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் வெறும் கையுடன் வெளியேறியது. குறிப்பாக அப்போட்டியில் கொஞ்சம் கூட போராடாமல் பேட்டிங், பவுலிங் துறைகளில் சொதப்பிய இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திலிருந்தும் என்ன பயன் என்று விளாசும் ரசிகர்கள் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்பட்டாலும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்றவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் இந்தியா கழற்றி விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் 5 சதங்களை அடித்து ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்திலும் இருக்கும் அவர் 2019 – 2021, 2021 – 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக உலக சாதனை படைத்து அடுத்தடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற உதவிய போதிலும் கடைசியில் கூல் ட்ரிங்ஸ் தூக்கும் பரிதாபத்தையே சந்தித்தார்.
அஸ்வின் ஆதங்கம்:
மேலும் இப்போட்டி மட்டுமல்லாமல் ஆரம்ப காலங்களில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அசத்தியதால் வெளிநாட்டு மண்ணில் சரிபட்டு வர மாட்டார் என்ற கண்ணோட்டத்துடன் 450க்கு மேற்பட்ட விக்கெட்களையும் 3000+ ரன்களை எடுத்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அவருக்கு இதுவரை இந்திய 11 பேர் அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்பது வேதனையாகும். அதனால் கோபமடைந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் இதுவே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரன்கள் அடித்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை ஃபைனலில் கழற்றி விடுவீர்களா என்று கொந்தளித்தார்.
அந்த நிலையில் ஃபைனலில் விளையாட மாட்டோம் என்பதை 48 மணி நேரங்களுக்கு முன்னதாகவே தெரிந்து கொண்டதாக தெரிவித்த அஸ்வின் ஓய்வுக்கு பின் ஏன் பவுலராக வந்தோம் என்று நினைத்து வருந்தப்போவதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். ஏனெனில் இங்கு சுமாராக செயல்பட்டாலும் தொடர்ந்து 10 – 20 போட்டிகளில் பேட்ஸ்மன்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஓரிரு போட்டிகளில் சொதப்பினால் பவுலர்களுக்கு கிடைப்பதில்லை என்று தெரிவித்த அவர் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இந்திய அணியினர் தற்போது சீனியர்களாக மாறிவிட்டதால் உதவுவதில்லை என கூறியிருந்தார்.
மேலும் அதிகப்படியாக சிந்திப்பவர் என்ற முத்திரையை உருவாக்கி கேப்டன்ஷிப் பதவியை தமக்கு கொடுப்பதில்லை என்று தெரிவித்திருந்த அவர் அதற்காக யாரையும் குறை சொல்லவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் ஃபைனலில் தோல்வியை சந்தித்தாலும் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த அஸ்வின் அந்த போட்டியில் வாய்ப்பும் வெற்றியும் கிடைக்காதது தம்மை விட இதய பாதிப்பு கொண்ட தம்முடைய தந்தைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஃபைனல் முடிந்ததும் நான் ஒரு ட்வீட் போட்டேன். ஏனெனில் நான் ஒரு விஷயத்தை உணர்ந்ததால் எனக்கு மூடல் தேவைப்பட்டது. குறிப்பாக தோல்வியை சந்தித்த அந்த போட்டியில் எனக்கு எங்கேயும் சுற்றித் திரிவதற்கு நேரமில்லை. இப்போது நான் வாழ்க்கையின் நன்றாக புரிந்து கொண்டேன். அதாவது தோல்வியை நான் அதிகமாக பார்க்கும் போது அது என்னுடைய குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் எண்ணிக்கை நம்ப முடியாததாக இருக்கிறது”
இதையும் படிங்க:எதிர்வரும் 50 ஓவர் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர ஆல்ரவுண்டர் – வெளியான உறுதி தகவல்
“என்னுடைய தந்தைக்கு இதயம் மற்றும் இதர பிரச்சனைகள் உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது நடக்கும் போது அவர் என்னை அழைத்து மன அழுத்தத்தில் இருப்பதை சொல்வார். எனவே அது இன்னும் என் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளியே சென்று விளையாடுவது எனக்கு எளிதாக இருக்கும். ஏனெனில் ஒரு தோல்வியால் நான் சந்திக்கும் சோகத்தை விட அவர் இரட்டிப்பாக சந்திக்கிறார். இது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கும்” என்று கூறினார்.