ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. அதில் தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ள இந்தியா தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
மேலும் இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்த கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இன்னும் ஃபார்முக்கு திரும்பாதது கொஞ்சம் பின்னடைவாகவே இருக்கிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா போல விராட் கோலியும் விரைவில் ஃபார்முக்கு வந்து விடுவார் என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் நம்பிக்கை:
மேலும் பாகிஸ்தான், துபாயில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்கள் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். எனவே அந்தத் துறையில் திறமையான வீரர்களைக் கொண்ட அணி தான் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்”
“எப்போதும் கிளாஸ் நிரந்தரமானது ஃபாரம் தற்காலிகமானது என்று சொல்வோம். எனவே அவர்கள் ஃபார்முக்கு வந்து விடுவார்கள். ரோகித் சதத்தை அடித்தது போல விராட் கோலியும் ஃபார்முக்கு வருவார். சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர்கள் ஃபார்முக்கு வருவதும் அவசியமாகும். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் ஸ்பின் பவுலிங் முக்கியமானதாக இருக்கும்”
ஸ்பின் முக்கியம்:
“ஏனெனில் அங்குள்ள ஆடுகளங்கள் ஸ்பின்னர்களுக்கு உதவி செய்யும். எனவே இந்தத் தொடரில் ஸ்பின்னர்கள் பெரிய பங்காற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன். உலகளவில் நிறைய நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் 4 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் வங்கதேச அணியிலும் நல்ல ஸ்பின் அட்டாக் இருக்கிறது”
இதையும் படிங்க: ரோஹித் அதைப் பற்றி பயப்படாம க்ளாஸை நிரூப்பிச்சுட்டாரு.. இங்கிலாந்துக்கு தோல்வியில்ல.. பசித் அலி பேட்டி
“ஒவ்வொரு ஆசிய நாடுகளும் நல்ல ஸ்பின்னர்களைக் கொண்டுள்ளது. இந்திய அணியில் கலவையான ஸ்பின், ஃபாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியிலும் நல்ல அட்டாக் இருக்கிறது. எனவே இங்குள்ள சூழ்நிலைகளில் அசத்துவதற்கு தேவையான பவுலிங் அட்டாக் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகளிடம் இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



