
பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச கிரிக்கெட் அணி அதனுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து தைரியமாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் சதமடித்து 171*, சௌட் ஷாக்கீல் 141 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிஃபுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 565 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிகப்பட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் சாத்மன் இஸ்லாம் நிதானமாக விளையாடி அரை சதமடித்து 93 ரன்களும், மோனிமுல் ஹைக் 50 ரன்களும், லிட்டன் தான் 56, மெஹதி ஹசன் 77 ரன்கள் குவித்தனர். அவர்களை விட மிடில் ஆர்டரில் ஃமுஸ்பிகர் ரஹீம் அபாரமாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி சதமடித்து 22 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 191 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நாசீம் ஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடும் பாகிஸ்தான் 4வது நாள் முடிவில் 23/1 ரன்கள் எடுத்துள்ளது. தற்சமயத்தில் வங்கதேசத்தை விட 94 ரன்கள் பின்தங்கியிருக்கும் பாகிஸ்தான் வெற்றிக்கு வாய்ப்பில்லை. அதே போல கடைசி நாளில் எஞ்சிய 9 விக்கெட்டுகளை வங்கதேசம் வேகமாக எடுக்க தவறினால் போட்டி டிராவில் முடிவடையவே வாய்ப்புள்ளது.
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள ரஹீமை வங்கதேச ரசிகர்கள் தங்களது நாட்டின் டான் பிராட்மேன் என்று கொண்டாடுவது வழக்கமாகும். அப்படிப்பட்ட அவர் இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் சாகின் அப்ரிடி, நாசீம் ஷா போன்ற பவுலர்களை எதிர்கொண்டு 191 ரன்கள் குவித்தார்.
அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வங்கதேச வீரராக ரஹீம் வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு பெசாவரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்துக்காக ஜாவேத் ஓமர் 119 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வயதில் (37 வருடம் 104 நாட்கள்) சதம் அடித்த வங்கதேச வீரர் என்ற வரலாற்று சாதனையும் ரஹீம் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 565 ரன்ஸ்.. அல்வா கேட்ச்சை விட்டு சிரித்த பாபர் அசாம்.. பாகிஸ்தானை பொளந்த வங்கதேசம்.. வரலாற்று சாதனை
அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக சதங்கள் (5) அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் ரஹீம் படைத்தார். இதற்கு முன் தமீம் இக்பால் 4 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட்டு முன்கூட்டியே டிக்ளேர் செய்த பாகிஸ்தானை ரஹீம் வருந்த வைத்தார் என்றே சொல்லலாம்.