துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. தற்போது துவங்கியுள்ள முதல் ரவுண்டில் பெங்களூரு நகரில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதி வருகின்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணி மிகவும் போராடி 321 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 30, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13, சர்பராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, வாஷிங்டன் சுந்தர் 0, சாய் கிஷோர் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 94-7 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணி 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
சொதப்பிய கில்:
இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடிய இளம் வீரர் முசீர் கான் அதிகபட்சமாக சதமடித்து 16 பவுண்டரி 5 சிக்சருடன் 181 ரன்கள் குவித்தார். அவருக்கு 9வது இடத்தில் களமிறங்கி 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கை கொடுத்த நவ்தீப் சைனி 56 ரன்கள் குவித்தார். இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் சுப்மன் கில் நிதானமாக விளையாட முயற்சித்தார். இருப்பினும் 25 ரன்களில் இருந்த போது நவ்தீப் சைனி வீசிய 14வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் பந்து வெளியே செல்லும் என்று நினைத்து அடிக்காமலேயே விட்டார். ஆனால் தரையில் பட்ட பின் உள்ளே திரும்பி வந்து அவரை கிளீன் போல்ட்டாக்கி பரிதாபமாக பெவிலியன் அனுப்பி வைத்தது. கடந்த காலங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் ஸ்விங் பந்துகளில் இப்படி போல்ட்ட்டான avarin பலவீனம் மீண்டும் அம்பலமானது.
முஷீர் கான் சாதனை:
அந்தளவுக்கு தரமான பந்தால் அவரை காலி செய்த நவதிப் சைனி மற்றொரு துவக்க வீரர் மயங் அகர்வாலையும் 36 ரன்களில் அவுட்டாக்கினார். இறுதியில் 2வது நாள் முடிவில் 134-2 ரன்கள் எடுத்துள்ள இந்தியா ஏ அணி இன்னும் 187 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ரியான் பராக் 27*, கேஎல் ராகுல் 23* ரன்களுடன் உள்ளனர்.
முன்னதாக 19 வயதாகும் முஷீர் கான் துலீப் கோப்பையில் இப்போது தான் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த முதல் போட்டியிலேயே அவர் 181 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் 20 வயதுக்கு முன் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முஷீர் கான் உடைத்தார்.
இதையும் படிங்க: இதை செஞ்சா போதும்.. இந்தியாவை வீழ்த்த முடியும்.. அதுக்கு இது தான் சாம்பிள்.. வங்கதேச கேப்டன் பேட்டி
இதற்கு முன் கடந்த 1991ஆம் ஆண்டு கிழக்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டல அணிக்காக சச்சின் டெண்டுல்கர் 159 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் (212), யாஷ் துள் (193) முதல் 2 இடங்களில் உள்ளனர்.