அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற நட்சத்திர தமிழக வீரர் – அடுத்த பயணத்துடன் ரசிகர்களுக்கு நன்றி

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளி விஜய் 2002 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடந்த 2010 ஐபிஎல் தொடரில் 458 ரன்கள் விளாசிய அவர் ராஜஸ்தானுக்கு எதிராக 127 ரன்களை தெறிக்க விட்டார். அந்த இன்னிங்ஸ் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர் முதல் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக கவனம் ஈர்க்கப்பட்ட அவர் அந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமாகி ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

ஆனால் அதற்கு முன்பாகவே 2008இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் 2010 முதல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் நாட்டிங்காம், காபா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதங்களை அடித்து அசத்தினார். அதனால் அந்த சமயத்தில் இந்தியாவின் நிரந்தர தொடக்க வீரராக விளையாடிய அவர் ஓரிரு வருடங்களுக்குப் பின் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து பெர்த் மைதானத்தில் விளையாடியிருந்தார்.

- Advertisement -

விடைபெற்ற விஜய்:
அதன் பின் குடும்ப பிரச்சினை காரணமாக 2019க்குப்பின் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாடாமல் இருந்த அவர் சில வருடங்களுக்குப் பின் கடைசியாக கடந்த டிஎன்பிஎல் தொடரில் விளையாடினார். அந்த நிலையில் இந்தியாவில் 30 வயது கடந்தவர்களை 80 வயது கிழவர்களைப் போல் பார்ப்பதாகவும் சேவாக்கிற்கு கிடைத்த வாய்ப்புகள் தமக்கு கிடைக்கவில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்த முரளி விஜய் விரைவில் வெளிநாடுகளில் வாய்ப்பு தேட போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள 38 வயதாகும் முரளி விஜய் அடுத்ததாக வெளிநாடுகளில் விளையாடுவதுடன் பிஸ்னஸ் செய்வது போன்ற வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலகட்டங்களில் தமக்கு வாய்ப்பு கொடுத்து ஆதரவு கொடுத்த பிசிசிஐ மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இன்று மிகுந்த நன்றியுணர்வு மற்றும் பணிவுடன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். 2002 – 2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள். ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும். பிசிசிஐ, டிஎன்சிஏ, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மார் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்”

“என்னுடைய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் ஆகிய அனைவருடன் இணைந்து விளையாடியது மிகவும் கௌரவமானது. உங்கள் அனைவருக்கும் நன்றி ஏனெனில் உங்களால் தான் என்னுடைய கனவு நிஜமானது. மேலும் எனது கேரியரில் மேடு பள்ளங்களிலும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது முதுகெலும்பாக இருந்து இந்த சாதனைகளை செய்ய முக்கிய காரணமாக அமைந்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இரட்டை சதமடிச்ச அவர் ரொம்ப மோசம், இப்படி விளையாடினால் எப்படி ஜெயிக்க முடியும் – இளம் வீரர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்

இந்தியாவுக்காக மொத்தமாக 87 போட்டிகளில் 4490 ரன்களை எடுத்துள்ள முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட்டில் 61 போட்டிகளில் 12 சதங்கள் 15 அரை சதங்கள் உட்பட 3982 ரன்களை 38.28 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் குறிப்பாக சென்னை அணிக்காக 106 போட்டிகளில் 2619 ரன்களை 121.87 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் இனிமேல் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக கூட விளையாடாத வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement