
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மனாக போற்றப்படுகிறார். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வரும் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 27000+ ரன்கள் 84 சதங்கள் அடித்துள்ளார். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 2014இல் ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறியது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2016 – 2021 வரை இந்தியாவை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். ஆஸ்திரேலியாவில் அவரது தலைமையில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசிய மற்றும் இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இந்திய அணியை ஃபிட்டாக மாற்றியதில் முக்கிய பங்காற்றிய அவர் எதிரணிகள் வம்பிழுத்தால் அதற்காக அஞ்சாமல் பதிலடி கொடுப்பதில் வல்லவராக அறியப்படுகிறார். இந்நிலையில் 2018 இங்கிலாந்து தொடரில் மைக்கேல் வாகன், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தம்மை வம்பிழுக்க முயற்சித்ததாக முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
அது பற்றி கேப்டன் விராட் கோலியிடம் சொன்ன போது தமக்காக அவர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும் முரளி விஜய் தெரிவித்துள்ளார். மொத்த அணியையும் ஃபிட்டாக மாற்றியதில் முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு காரணமாக இருந்ததாகவும் முரளி விஜய் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அதிகம் பேசக்கூடிய மைக்கேல் வாகன் உங்களை சுற்றி மேகங்கள் சூழ்ந்து இருப்பதாக என்னிடம் சொன்னார். அதற்கு தேநீர் இடைவெளியில் உங்களிடம் பேசுகிறேன் என்று அவருக்கு நான் பதிலளித்தேன். அதே போல ஆக்ரோஷமான ஜேம்ஸ் ஆண்டர்சனும் என்னிடம் பேச விரும்பினார். அப்போது அவர்களுக்கு எங்கள் சார்பாக பதிலளிக்க விராட் கோலி தான் சரியான நபர் என்று உணர்ந்தேன்”
இதையும் படிங்க: இதை வெச்சுட்கிட்டு முட்டை கப்பை கூட ஜெய்க்க முடியாது.. பஸ்பால் இங்கிலாந்தை விளாசிய பாய்காட்
“விராட் கோலி ஒருவர் போதும். ஆக்ரோஷமான அவர் எதிரணிகளுடன் மோதுவதை விரும்புவார். எதிரணிகளுக்கு 10 மடங்கு திருப்பிக் கொடுப்பார். எதிரணிகளுடன் பேசிக்கொண்டே பேட்டிங் செய்வதை விரும்பக்கூடிய அவருடன் விளையாடியது எனக்கு சிறந்ததாகும். அவரது எனர்ஜி உயர்வானது. விராட் கேப்டனாக இருந்த போது எங்களிடம் வந்து ஃபிட்னஸ் பற்றி பேசினார். நாம் என்ன லெவலை சாதிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர் சொன்னார். அதற்காக நாங்கள் போட்ட முயற்சி 2018இல் ஆஸ்திரேலியாவில் பரிசைக் கொடுத்தது” என்று கூறினார்.