வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்டோபர் ஆறாம் தேதி குவாலியர் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 127 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. பின்னர் சேசிங் செய்த இந்தியா 11.5 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து அதிரடியான வெற்றி பெற்றது.
அதனால் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் நிதிஷ் ரெட்டி மற்றும் மயங் யாதவ் ஆகிய 2 இளம் வீரர்கள் இந்தியாவுக்காக அறிமுகமானார்கள். அதில் மயங் யாதவ் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசி 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து நன்றாக பந்து வீசினார்.
முரளி கார்த்திக்க்கு வாய்ப்பு:
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான அவர் தொடர்ச்சியாக 155கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மேலும் தனது முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகள் வென்ற முதல் வீரராகவும் மயங் யாதவ் சாதனை படைத்தார். அதன் பின் காயத்தை சந்தித்த அவர் தற்போது குணமடைந்துள்ளதால் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் வாழ்த்தி அறிமுக தொப்பியை வழங்கினார். இந்நிலையில் மயங் யாதவுக்கு அறிமுகத் தொப்பியை வழங்கும் வாய்ப்பை தமக்குக் கொடுத்த பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு முரளி கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக 25 வருடங்களுக்கு முன் தமக்கு ஜாம்பவான்கள் சச்சின், கபில் தேவ் அறிமுகத் தொப்பியை வழங்கியதாக முரளி கார்த்திக் கூறியுள்ளார்.
கம்பீருக்கு நன்றி:
அது போன்ற வாய்ப்பை தற்போது தமக்கு கொடுத்த கம்பீருக்கு ட்விட்டரில் அவர் நன்றி தெரிவித்துள்ளது பின்வருமாறு. “வேகத்தில் அசத்தக்கூடிய மயங் யாதவுக்கு என்ன ஒரு மறக்க முடியாத நாள். இது சச்சின் மற்றும் கபில் பாஜி ஆகியோரிடம் எனது தொப்பியை பெற்ற 25 வருடங்களுக்கு முந்தைய நாளுக்கு என்னை அழைத்துச் சென்றது”
இதையும் படிங்க: 253 ரன்ஸ்.. கல்லறை தார் ரோட்டில் அடிச்சுட்டு பெருமை வேறயா? பாகிஸ்தான் மீது பீட்டர்சன், வாகன் விமர்சனம்
“இந்த தொப்பியை வழங்குமாறு கௌதம் கம்பீர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டது ஒரு மனதைத் தொடும் தருணம்” என்று கூறினார். 2000 – 2007 காலகட்டங்களில் இந்தியாவுக்காக 8 டெஸ்ட் மற்றும் 37 ஒருநாள் போட்டிகளில் முரளி கார்த்திக் விளையாடினார். சுழல் பந்து வீச்சாளரான அவர் அதில் மொத்தம் 61 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரராக சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



