இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அவர்கள் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கும் அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் அவர்கள் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்கள். அதற்கு முன் நல்ல ஃபார்மில் வைத்துக் கொள்வதற்காக 2025 விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட ரோஹித் சர்மா முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அது பற்றி மும்பை வாரியத்திடம் ரோஹித் சர்மா தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அவசரப் படாதீங்க:
அதனால் நீண்ட நாட்கள் கழித்து ரோஹித் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஆசையுடன் காத்திருக்கத் துவங்கினார்கள். இந்நிலையில் அவசரப்பட்டு ரசிகர்கள் ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று ரோஹித் ரசிகர்களை மும்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சஞ்சய் பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவது பற்றி நம்மிடம் ரோஹித் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சஞ்சய் பாட்டில் பேசியது பின்வருமாறு. “முறையாக ரோஹித்திடமிருந்து இதுவரை நான் எதையும் கேட்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர் மும்பைக்காக விளையாடினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ரோஹித், விராட் போன்றவர்கள் இளம் வீரர்களுக்கு ரோல் மாடல்களாக திகழ்கின்றனர்”
வந்தா நல்லாருக்கும்:
“எனவே அவர்கள் உள்ளூரில் விளையாடுவது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். சீனியர்களின் ஆதரவு இருந்த காரணத்தாலேயே மும்பை இதுவரை 42 ரஞ்சிக் கோப்பை பட்டங்களை வென்றுள்ளது. கடந்த காலங்களில் ரவி சாஸ்திரி, திலீப் வெங்சர்க்கார், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற சீனியர்கள் மும்பைக்காக விளையாட தயாராக இருந்தனர்”
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட் கடினமான இந்த 2 விஷயத்தை சுப்மன் கில் ரொம்ப ஈஸியா பண்றாரு – ஹாசிம் அம்லா கருத்து
“நாட்டுக்காக விளையாடாத சமயங்களில் அவர்கள் மும்பைக்காக விளையாடினர். அதே போல இம்முறை ரோகித் மும்பைக்காக விளையாடினால் நான் மகிழ்ச்சியடைவேன். நாட்டுக்காக விளையாடாத சமயங்களில் அனைவரும் உள்ளூரில் விளையாட வேண்டும் என்ற நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளதற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். ஒருவேளை ரோஹித் விளையாடினால் முஷீர் கான், ஆயுஷ் மாத்ரே ஆகிய இளம் வீரர்கள் அவருடைய மூளை மற்றும் பாதைகளைப் பின்பற்றுவார்கள்” என்று கூறினார்.



