24 பந்தில் 50.. தாய் நாட்டை புரட்டிய நியூஸிலாந்தின் பாக் வீரர் அப்பாஸ்.. பாண்டியாவை முந்தி உலக சாதனை

Muhammad Abbas
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் நியூஸிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக அந்த 2 அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டி மார்ச் 29ஆம் தேதி நேப்பியர் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து விளையாடிய நியூசிலாந்து 50 ஓவரில் பாகிஸ்தான் பவுலர்களை புரட்டி எடுத்து 344/9 ரன்கள் குவித்தது. வில் எங் 1, நிக் கேலி 15, ஹென்றி நிகோலஸ் 11 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 50/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூஸிலாந்துக்கு மார்க் சேப்மன் அபாரமான சதத்தை அடித்து 132 (111) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு அடி:

அவருடன் சேர்ந்து விளையாடிய டேரில் மிட்சேல் 76 ரன்கள் அடித்து அசத்தினார். அவர்கள் இருவர்களை விட கடைசி நேரத்தில் களமிறங்கிய முகமது அப்பாஸ் தனது அறிமுகப் போட்டியிலேயே பாகிஸ்தான் பவுலர்களை நாலாபுறமும் அடித்து 3 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 52 ரன்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மிரட்டினார். குறிப்பாக 24 பந்துகளில் அவர் அரை சதத்தை தொட்டார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை முகமது அப்பாஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 2021ஆம் ஆண்டு இந்திய வீரர் க்ருனால் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதை தற்போது உடைத்துள்ள முகமது அப்பாஸ் பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர்.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:

அவருடைய தந்தை அசார் அப்பாஸ் பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி பின்னர் நியூசிலாந்துக்கு குடி பெயர்ந்தார். அங்கு அவரது மகன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இன்று நியூசிலாந்துக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தம்முடைய தாய் நாட்டை அதிரடியாக எதிர்கொண்ட முகமது அப்பாஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 23க்கு 22 வெற்றி.. 2023 ஜஸ்ட் மிஸ்.. 2 ஐசிசி கோப்பைக்கான திட்டத்தை 2022 ஆஸியில் உருவாக்குனேன்.. ரோஹித் பேட்டி

இறுதியில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக இர்பான் கான் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானை சிறப்பாக பவுலிங் செய்த நியூசிலாந்து 44.1 ஓவரில் 271 ரன்களுக்கு சுருட்டி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள அந்த அணிக்கு அதிகபட்சமாக நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக பாபர் அசாம் 78, சல்மான் ஆகா 58 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement