பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் திண்டாட்டமாக விளையாடி தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா போன்ற 2வது தர அணிகளிடம் பாகிஸ்தான் முதல் முறையாக அவமானத் தோல்விகளை சந்தித்தது. அத்துடன் சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர். ஆனால் சமீப காலங்களில் சுமாராக செயல்படுவதால் தற்போது பாபர் அசாம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
விராட் கோலி – ரோஹித் சர்மா:
இந்நிலையில் பாபர் அசாம் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் விராட் கோலியுடன் ஒப்பிடக்கூடாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அதை மணிக்கணக்கில் உட்கார்ந்து பார்க்கலாம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் ஷாஹீன் அப்ரிடியை ஒரு தொடருடன் பாகிஸ்தான் டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் நாசர் பேசியது பின்வருமாறு. “அந்த 2 வீரர்களுக்கும் மத்தியில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலி இந்த விளையாட்டில் ஜொலித்த மகத்தான வீரராக நினைவு கொள்ளப்படுவார். பாபர் அசாம் முதலில் இன்னும் தமக்குத் தாமே பெயரை உருவாக்க வேண்டும். நான் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்”
பாபர் அசாம் – ஷாஹீன் அப்ரிடி:
“அவர்கள் உச்சத்தில் இருக்கும் போது விளையாடுவதை பார்ப்பது அற்புதமாக இருக்கும். அவர்களை நீங்கள் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து மணி கணக்கில் பார்க்கலாம். பாபர் அசாம் – ஷாஹீன் அப்ரிடி விஷயத்தில் நாம் சொதப்பியிருக்க கூடாது. ஒரு கேப்டன் செட்டாகியிருந்தால் அவருக்கு நீங்கள் நீண்ட கால வாய்ப்பு கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: குப்பை மாதிரியான பொய்.. தோனி பற்றி தவறான தகவலை கொடுத்த ஹர்பஜனுக்கு.. சிஎஸ்கே பதிலடி
“அதே சமயம் மற்றொருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவருக்கும் நீங்கள் நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும். உடனடியாக தூக்கி எறியக் கூடாது” என்று கூறினார். இந்த நிலையில் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் இரண்டாவது முறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



