நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் முறையாக தோல்வியை பதிவு செய்துள்ளது. அதனால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அந்த 6 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
புஜாரா வேண்டும்:
அதில் செடேஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018/19, 2020/21 ஆகிய கடைசி 2 தொடர்களில் வரலாறு காணாத வெற்றிக்கு புஜாரா முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அதன் பின் சுமாராக விளையாடியதால் அவரை பிசிசிஐ கழற்றி விட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் ரஞ்சிக் கோப்பையில் புஜாரா இரட்டை சதமடித்தார்.
எனவே நியூஸிலாந்திடம் 46க்கு அவுட்டாவது போன்ற சூழ்நிலைகளை தடுக்கவும் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெல்வதற்கும் புஜாரா முக்கியம் என்று பிரசாத் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “புஜாரா இப்போது தான் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்தார். அவர் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் தேவைப்படும் அனுபவம் மற்றும் திடத்தன்மை ஆகியவற்றை கொண்டு வருவார்.
புஜாரா வேண்டாம்:
“அதே போல ஒரு இந்தியா ஏ போட்டியில் விளையாடிய பின் நிதிஷ் குமாரை பிசிசிஐ தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். அவருக்கு மற்றொரு முன்னாள் இந்திய வீரர் விஜய் தஹியா அதே பேட்டியில் பதிலளித்தது பின்வருமாறு. “புஜாரா இந்தியாவுக்காக அபாரமாக விளையாடினார். ஆனால் இதை மரியாதையாக சொல்கிறேன்”
இதையும் படிங்க: பேப்பர் புலிகள் நொறுங்கிட்டாங்க.. சொன்னதை செய்யலையே.. 12 வருடத்துக்கு பின் தோற்ற இந்தியாவை சேஷாத் கிண்டல்
“சட்டீஸ்கர் அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் அவர் அடித்த இரட்டை சதம் சிறந்த பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக வரவில்லை. 2 அணிகளும் 1000 ரன்கள் அடித்த போட்டியில் தான் அவர் இரட்டை சதமடித்தார்” என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவில் 36க்கு ஆல் அவுட்டான போது புஜாராவும் இந்திய அணியில் இருந்தார். அதனால் மீண்டும் அவரை தேர்ந்தெடுப்பதில் அர்த்தமில்லை என்று தஹியா கூறியது குறிப்பிடத்தக்கது.



