இவங்க தான் எனக்கு முக்கியம். ஐ.பி.எல் தொடர் நிறுத்தப்பட்டும் வீடு திரும்பாத தல தோனி – காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி உலகளவில் தனது நல்ல குணத்தினால் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போதுவரை அவருக்கான மவுசு ரசிகர்களிடையே இதுவரை குறைந்ததில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவருக்காகவே இந்த ஐபிஎல் தொடரை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு வைத்துள்ளனர்.

- Advertisement -

கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இதுதான் உங்களது கடைசி தொடரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நிச்சயம் இல்லை என்று ஒரு வார்த்தையில் தோனி அளித்த ஒரு பதிலால் அவரின் ரசிகர்கள் பட்ட இன்பம் ஏராளம் என்று கூறலாம். அந்த வகையில் இந்த வருடமும் அவர் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இருப்பினும் துரதிஷ்டவசமாக இந்தியாவில் பரவிய கொரோனா காரணமாக தற்போது இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டும் தோனி வீடு திரும்பவில்லை என்ற தகவல் வெளியானது. மேலும் அது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அவர்களின் மனதை கவரும் படியாக அமைந்துள்ளது. அதன்படி தான் ஏன் இதுவரை வீடு திரும்பவில்லை என்பதற்கான கேள்விக்கு தோனி அளித்த பதிலாவது :

Dhoni

முதலில் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து அவர்களது நாட்டுக்கு திரும்ப வேண்டும். அதன் பின்னர் அணியில் உள்ள இந்திய வீரர்களும் பத்திரமாக அவரவரது நகரங்களுக்கு செல்ல வேண்டும். அதன் பின்னரே நான் இங்கிருந்து கடைசி ஆளாக எனது வீட்டுக்கு (ராஞ்சிக்கு) புறப்படுவேன் என்று தெளிவாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறிவிட்டாராம். அதன்படி தற்போது சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலாஜி மற்றும் மைக்கேல் ஹஸி ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் பாதுகாப்பான முறையில் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுள்ளார்கள்.

Dhoni

இதன் காரணமாக தோனி நாளை கடைசியாக நபராக ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறி ராஞ்சிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தன்னை நம்பி அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் கடைசியாக தான் வீட்டுக்கு செல்வேன் என்று கூறிய தோனியின் இந்த பெருந்தன்மையான மனது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பாலாஜி மற்றும் ஹஸி ஆகியோரை சி.எஸ்.கே நிர்வாகம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement