இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார். உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதே போல அதிரடியாக விளையாடி இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்த அவர் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.
2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 45 வயதாகும் தோனி தம்முடைய உடலை நல்ல ஃபிட்டாக வைத்துள்ளார் என்றே சொல்லலாம். அதனாலேயே 45 வயதிலும் ஐபிஎல் தொடரில் அவரால் இளம் வீரர்களுக்கு நிகராக ஓரளவு சிறப்பாக விளையாட முடிகிறது.
இந்தியர்களின் ஆயுள்:
இந்நிலையில் தம்முடைய சொந்த ஊரான ராஞ்சியில் தோனி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நகரங்களில் உள்ள தற்போதைய இந்தியர்கள் குறைவான உடல் உழைப்பை வெளிப்படுத்துவதாக தோனி கவலைத் தெரிவித்தார். அத்துடன் தம்முடைய மகள் ஜீவா உட்பட பெரும்பாலானவர்கள் விளையாட்டு சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை என்றும் தோனி தெரிவித்தார்.
அதனாலேயே முன்பெல்லாம் சாதாரணமாக 100 வயது வரை வாழ்ந்த இந்தியர்களின் தற்போதைய ஆயுள் காலமும் வயதும் குறைந்துள்ளதாக தோனி கூறியுள்ளார். எனவே அனைவரும் நன்றாக விளையாடி உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோனி அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
அக்கறையுடன் தோனி அட்வைஸ்:
“இப்போதெல்லாம் வயது குறைந்து வருகிறது. ஏனெனில் நம்முடைய உடல் செயல்பாடுகளின் அளவு குறைந்து வருகிறது. இந்தியர்கள் ஆகிய நமது சராசரி உடல் தகுதியளவு (ஃபிட்னெஸ்) குறைந்து விட்டது. என் மகள் கூட அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்று நினைக்கிறேன். அவள் விளையாட்டில் ஈடுபடுவதில்லை”
இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் இப்படித்தான் இருக்கனும்.. தேர்வுசெய்து அறிவித்த – ஆகாஷ் சோப்ரா
“எனவே நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் செயல்பாடுகளை செய்வதற்கான விஷயங்களை செய்ய திட்டமிட வேண்டும். இப்பொதெல்லாம் நிறைய பேர் விளையாட்டில் விளையாடுவதில்லை” என்று கூறினார். முன்னதாக தம்முடைய உடல் தகுதியைப் பொறுத்தே அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னைக்காக மீண்டும் விளையாட உள்ளது பற்றி முடிவு செய்ய உள்ளதாக தோனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



