மனதளவில் காயம் பட்டிருக்கிறோம். எதுவுமே எங்கள் வழியில் இல்லை – மனம்கலங்கி பேசிய தோனி

Dhoni 2

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்த வருடம் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. 1 – 2 போட்டிகளில் மட்டுமே நாங்கள் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகியவற்றை சிறப்பாக செய்தோம். ஒரு போட்டியில் 10 விக்கெட் அல்லது 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம். வீரர்கள் அனைவரும் இதனால் மனதளவில் மிகவும் காயம் அடைவார்கள். ஆனால் அனைவரும் தங்களது பெஸ்ட் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

எப்போதும் வெற்றி நம் வழியில் வராது அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என நம்புவோம். போட்டியில் எப்போதும் சிறிது அதிர்ஷ்டம் நம் வழியில் தேவை. ஆனால் இந்த டோர்னமெண்ட் இல் எதுவுமே நம் பக்கம் இல்லை. இந்த போட்டியில் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்து வீச தீர்மானம் செய்து இருப்பேன். ஏனெனில் மைதானத்தில் பனிப்பொழிவு இருந்த காரணத்தினால் இரண்டாவது பேட்டிங் செய்வது சாதகமாக அமைந்திருக்கும். இறுதியில் நாம் நினைத்தபடி எந்த ஒரு விடயமும் நம் வழியில் செல்லவில்லை.

csk

இந்த தோல்விகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் நிறைய இருக்கின்றன. தவறுக்கான காரணங்கள் 100 இருக்கலாம். ஆனாலும் நாம் நமது விளையாட்டை சரியாக விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே நாம் சிறப்பாக விளையாடவில்லை. 3 – 4 பேட்ஸ்மேன்கள் மட்டும் சிறப்பாக விளையாடினால் அது அணிக்கு சிக்கலைத் தரும் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.