ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதிகபட்சமாக ஷாருக்கான் 47 ரன்களையும், ரிச்சர்ட்சன் 15 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 36 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பலம் வாய்ந்த பஞ்சாப் அணி பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவர்ப்ளே ஓவர்களிலேயே பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் முடிவுக்கு வந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய போது மூன்றாவது வீரராக சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக மொயின் அலி களத்திற்கு வந்தார். அவரது இந்த வருகை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமைந்தது. இருப்பினும் அந்த இடத்தில் பொறுப்பாக விளையாடிய அவர் 31 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி என 46 ரன்களை எடுத்து அசத்தினார். அதுமட்டுமின்றி பவுலிங்கில் மூன்று ஓவர் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி தான் ஒரு ஆல்-ரவுண்டராக நிரூபித்த மொயின் அலி தனது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து மொயின் அலியை மூன்றாவது வீரராக களமிறக்கிய காரணத்தை கேப்டன் தோனி வெளிப்படுத்தி இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் ரெய்னாவுக்கு முன்னதாக நாங்கள் மொயின் அலியை பேட்டிங் செய்ய அனுப்பினோம். ஏனெனில் அணியில் உள்ள வீரர்களை நாங்கள் பயன்படுத்தி பார்க்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மொயின் அலிபந்தினை சரியாக டைமிங் செய்வதில் வல்லவர். சிறப்பான பல ஷாட்டுகள் அவரிடம் உள்ளதால் அவரை முன்கூட்டியே களமிறக்கினோம் என்று மொயின் அலி பிரமோஷன் குறித்து தோனி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.



