வீடியோ : மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து சுப்மன் கில்லை மிரளவைத்த தல தோனி – டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

MS Dhoni Stumping
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிகெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. குறிப்பாக முதல் நாளில் மழையால் ரத்து செய்யப்பட்ட போட்டி ரிசர்வ் நாளில் துவங்கிய நிலையில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 214/4 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஏற்கனவே ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட ஃபார்மில் சுப்மன் கில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். போதாகுறைக்கு தீபக் சஹர் விட்ட கேட்ச்சை பயன்படுத்தி அதிரடி காட்டிய அவர் 7 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது 39 (20) ரன்களில் அவுட்டானார். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மாயாஜாலம் செய்யும் வகையில் வீசிய பந்தின் லைனை சரியாக கணிக்க தவறிய அவர் சற்று இறங்கி சென்று அடிக்க முயற்சித்து பந்தை தவற விட்டார்.

- Advertisement -

மின்னல் வேகம்:
அப்போது அதை கச்சிதமாக பிடித்த தோனி கண்ணிமைப்பதற்குள் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். அதை 3வது நடுவர் சோதித்த போது சுப்மன் கில் காலை வெளியே எடுத்து அடுத்த நொடியே அவர் வெறும் 0.1 நொடி நேரத்தில் ஸ்டம்ப்பிங் செய்தது தெளிவாக தெரிந்ததால் நடுவர் அவுட் கொடுத்தார். அதை “வங்கியின் பண நோட்டுகள் கூட மாறும் ஆனால் தோனியின் வேகம் மாறாது” என்று வீரேந்திர சேவாக் பாராட்டினார். அதே போல் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஆச்சரியமடைந்த நிலையில் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த ரித்திமான் சஹா 2வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 5 பவுண்டரி 1 சிக்சருடன் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

ஆனால் மறுபுறம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக விளையாடிய சாய் சுதர்சன் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று சென்னை பவுலர்களை வெளுத்து வாங்கி அரை சதமடித்தார். அதே வேகத்தில் தொடர்ந்து பட்டையை கிளப்பிய அவர் துஷார் தேஷ்பாண்டே போன்ற பவுலர்களை கடைசி நேரத்தில் துவம்சம் செய்து பதிரனா வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு சதத்தை நெருங்கினார். அதனால் மாபெரும் ஃபைனலில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் 96 (47) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் சென்னையை புரட்டி எடுத்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

அவருடன் கடைசி நேரத்தில் கேப்டன் பாண்டியா 2 பவுண்டரியுடன் 21 (12) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுக்க சுமாராக செயல்பட்ட சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் களமிறங்கிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த தோனி 1 ஸ்டம்பிங் மற்றும் 1 கேட்ச் பிடித்து விக்கெட் கீப்பராக அசத்தலாகவே செயல்பட்டார்.

இதையும் படிங்க:CSK vs GT : மாபெரும் ஃபைனலில் சென்னையை பிரித்து மேய்ந்த தமிழகத்தின் இளம் சிங்கம் – சிஎஸ்கே தோல்வி உறுதியா?

அதன் வாயிலாக சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 301*
2. தினேஷ் கார்த்திக் : 296
3. ரிதிமான் சஹா : 174

Advertisement