ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் நட்சத்திர முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது சந்தேகமாக காணப்படுகிறது. கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார்.
அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அத்துடன் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அதனால் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாகவே பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.
பிசிசிஐ கையில்:
இருப்பினும் தம்மை தல என்று கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்களுக்காக தமது கேரியரின் கடைசிப் போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று தோனி ஏற்கனவே கூறியுள்ளார். எனவே 2025 சீசனில் தோனி விளையாடி சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் 2025 ஐபிஎல் சீசனுக்காக மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன.
அந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அது போன்ற சூழ்நிலையில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை பிசிசிஐ அதிகரித்தால் மட்டுமே தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக கிரிக்பஸ் மற்றும் செய்தி வெளியாகியுள்ளது. தற்சமயத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீஸா பதிரனா ஆகியோரை தக்க வைக்க சென்னை அணி நிர்வாகம் விரும்புவதாக செய்திகள் காணப்படுகின்றன.
எனவே தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை 5 அல்லது ஆறாக அதிகரித்தால் மட்டுமே 2025 சீசனில் விளையாடுவேன் என்று சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் அவர்களிடம் தோனி பேசியுள்ளதாக கிரிக்பஸ் செய்தி தெரிவிக்கிறது. ஒருவேளை அது நடக்காமல் போனால் விளையாடப் போவதில்லை என்று தோனி கூறியதாக தெரிகிறது. அப்படி விளையாடவில்லையெனில் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி பொறுப்பேற்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: இந்திய அணியில் அவர் அவசரமா சாப்பிடுவாரு.. அதே மாதிரி உழைச்சு விக்கெட்ஸ் எடுத்துருவாரு.. அர்ஷ்தீப் பேட்டி
இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெறுவதால் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை 8ஆக உயர்த்துமாறு பிசிசிஐக்கு அனைத்து ஐபிஎல் அணிகளும் கோரிக்கை வைத்துள்ளன. எனவே தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



