இந்த வருசத்துடன் ரிட்டையர் ஆகுறீங்களா? செய்தியாளரின் கேள்விக்கு தோனி கொடுத்த நேரடி பதில் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த தொடரில் 5வது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை விட இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளையும் சென்னைக்கு 4 கோப்பைகளையும் வென்று கொடுத்து வரலாற்றின் மகத்தான கேப்டனாக திகழும் தோனியின் கையில் கோப்பையை வாங்கி கொடுத்து வெற்றியுடன் விடை பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

ஏனெனில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 2020இல் விடைபெற்ற தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அத்துடன் தன்னை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீதிருக்கும் பாசத்தால் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று ஏற்கனவே தோனி அறிவித்திருந்தார். அதற்கேற்றார் போல் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த நிலையில் சமீப காலங்களாகவே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வரும் அவர் இம்முறை கட்டுமஸ்தான உடம்புடன் கடுமையான பயிற்சிகளை எடுத்து பழைய தோனியாக விளையாடி வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தோனியின் பதில்:
குறிப்பாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கி அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 31* (17) ரன்கள் விளாசி கடைசி பந்து வரை வெற்றிக்கு போராடினார். அப்படி 41 வயதிலும் சிறப்பாக செயல்படும் அவர் ஃபிட்டாக இருப்பதால் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷேன் வாட்சன், ரோகித் சர்மா போன்றவர்கள் இத்தொடரின் துவக்கத்தில் தெரிவித்தனர். அதுவே சென்னை மட்டுமல்லாது பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

ஆனால் 41 வயதாகி விட்டதால் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி இத்தொடரின் முதல் போட்டியிலேயே காயமடைந்து அதற்கான சிகிச்சைகளுடன் விளையாடி வருகிறார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் டபுள் எடுக்க முடியாமல் தடுமாறியதுடன் நொண்டி நொண்டி சென்றது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அதன் காரணமாக என்ன தான் ஃபிட்டாக இருந்தாலும் விரைவில் 42 வயதை தொடும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று அவருடைய நண்பர் மற்றும் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் சமீபத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சீசனுடன் ஓய்வு பெறுகிறீர்களா என்பதை தோனியிடம் நேரடியாகவே சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு இப்போது அதை தெரிவித்தால் அது பயிற்சியாளர் உட்பட சென்னை அணியினரிடம் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கி விடும் என்று தோனி கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓய்வு பற்றிய முடிவு எடுக்க நிறைய நேரம் உள்ளது. எனவே தற்போதைக்கு எங்களுக்கு நிறைய போட்டிகள் காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் நான் அதை சொன்னால் அது பயிற்சியாளர் உட்பட அனைவருக்கும் அழுத்தத்தை உண்டாக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அப்படி அவர் கூறியது அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தியது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை இன்னும் 10 போட்டியில் விளையாடும் என்பதால் அந்த முடிவை பற்றி இப்போது தெரிவிக்க விரும்பவில்லை என தோனி தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் பொதுவாகவே யாரும் எதிர்பாராத வகையில் திடீரென எடுக்கக்கூடிய அவர் இந்த சீசனின் கடைசி போட்டியில் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: MI vs KKR : கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலே சூரியகுமார் யாதவிற்கு இப்படி ஒரு சோதனையா? – நடந்தது என்ன?

ஆனாலும் இப்போதும் பழைய சரக்குக்கு மவுசு குறையாது என்பது போல் தோனி களமிறங்கினால் 2.2 கோடி ரசிகர்கள் நேரலையாக மொபைல் போனில் அவரது ஆட்டத்தை பார்க்கிறார்கள். எனவே இந்த சீசனையும் தாண்டி அவர் விளையாட வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement