
தாதா என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2000ஆம் ஆண்டு இந்திய அணி சூதாட்ட புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தரமான வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்த்தார். அவருடைய ஆதரவில் வளர்ந்த சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகிர் கான், தோனி போன்ற பல வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி நடை போட வைத்தனர்.
நாளடைவில் கங்குலி வளர்த்த அனைத்து வீரர்களுமே ஜாம்பவான்களாக உருவெடுத்தனர். அந்தளவுக்கு தரமான கேப்டனாக அறியப்படும் கங்குலி தலைமையில் இந்தியா 2002 சாம்பியன்ஸ் ட்ராபி, நாட்வெஸ்ட் முத்தரப்பு கோப்பையை வென்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது.
மேலும் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இடது கை பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்த அவர் 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் சௌரவ் கங்குலி ஓய்வு பெற்றார். அப்போட்டியின் கடைசி நாளில் வெற்றி உறுதியான பின் கங்குலியை இந்தியாவை வழி நடத்துமாறு புதிய கேப்டன் தோனி அழைத்தார்.
தம்மைப் போன்ற பல வீரர்களை வளர்த்து இந்திய அணியை சிறப்பாக கட்டமைத்த கங்குலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தோனி அந்த கௌரவத்தை வழங்கினார். அதை கொஞ்சமும் எதிர்பாராத கங்குலியும் மகிழ்ச்சியுடன் ஏற்று தனது கேரியரின் கடைசி நிமிடங்களில் இந்தியாவை வழி நடத்தி கேப்டனாகவே ஓய்வு பெற்றார். இந்நிலையில் அப்போட்டியில் இந்தியாவை தலைமை தாங்க கங்குலியை அழைத்த காரணம் பற்றி தோனி பேசியது பின்வருமாறு.
“இந்தியா கண்டெடுத்த மகத்தான கேப்டன்களில் ஒருவருக்கு நீங்கள் இன்னும் எந்த சிறந்த வழியனுப்பும் நிகழ்வை ஏற்படுத்த முடியும்? கங்குலி தனது கேரியரின் கடைசி நாளில் களத்தில் நின்று கொண்டிருந்தார். எனவே கொஞ்சம் நேரம் முன்னின்று இந்தியாவின் கேப்டனாக “குட் பை” சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதை ஏன் நம்மால் செய்து கொடுக்க முடியாது”
இதையும் படிங்க: இதோட என் பயணம் முடிந்து விட்டது என்பது புரிந்துவிட்டது.. ஓய்வை அறிவித்த – ஆஸி வீரர் மேத்யூ வேட்
“அது போட்டியின் முடிவையும் பெரிதாக மாற்றாது. அதுவே அந்த முடிவை எடுப்பதற்கான காரணமாகும். அந்த கடைசியில் சில நிமிடங்களில் கங்குலி மகிழ்ச்சியாக இருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் அது திடீரென நடந்தது. எதுவும் திட்டமிடவில்லை. உங்களை சிறந்த முறையில் வழியனுப்ப இதுவே என்னால் முடிந்தது என்பது போல் அதை செய்தேன். அது 15 – 20 நிமிடமாக இருந்தாலும் அதை ஏன் செய்யக்கூடாது” என்று கூறினார்.